கடலை எண்ணெய் விலை சரிவு இறக்குமதி வரியை உயர்த்த ஆலோசனை
கடலை எண்ணெய் விலை சரிவு இறக்குமதி வரியை உயர்த்த ஆலோசனை
ADDED : பிப் 23, 2025 12:42 AM

சேலம்,:கடலை எண்ணெய் விலை, லிட்டர், 160 ரூபாயாக சரிந்த நிலையில், உள்ளூர் விவசாயிகளை ஊக்கப்படுத்த, தாவர எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
தாவர எண்ணெய் தேவையில், மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி வாயிலாக இந்தியா பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்தில் இருந்து பாமாயில்; அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, உக்ரைனில் இருந்து சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்கிறது.
உள்நாட்டில் விளையும் எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை, சோயா பீன் உள்ளிட்டவற்றின் விலை, அரசு அறிவித்துள்ள ஆதார விலையை விட குறைவாக இருந்ததால், 2024 செப்டம்பரில், கச்சா தாவர எண்ணெய்களுக்கு, 5.5 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, 27.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு, 13.75 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, 35.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
அதன் பின்பும் உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் விலை, அரசு நிர்ணயித்த ஆதார விலையை விட குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது. இதற்கு, நடப்பு ஆண்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி கணிசமாக அதிகரித்ததும் காரணம்.
குறிப்பாக கடந்த ஆண்டு குஜராத்தில், 40 லட்சம் ஏக்கரில் நிலக்கடலை உற்பத்தி நடந்த நிலையில், நடப்பாண்டு, 47 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை அறுவடைக்கு பின், அதன் விலை சரிய துவங்கியுள்ளது. இதனால் எண்ணெய் வித்துக்களின் விலை, அரசின் ஆதார விலையை விட, மீண்டும் குறைந்த விலைக்கு விற்பனையாகி வருகிறது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால், இதை தடுக்க இறக்குமதி எண்ணெய் மீதான வரியை, மேலும் உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து, சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர் சங்கத்தலைவர் சந்திரதாசன் கூறியதாவது:
கடந்த செப்டம்பரில் இறக்குமதி வரி உயர்வு, டாலர் விலையேற்றத்தால், லிட்டர், 110 ரூபாய்க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், படிப்படியாக விலை உயர்ந்து தற்போது, 150 ரூபாயாக உள்ளது. பாமாயில், 95ல் இருந்து, 140 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தற்போது குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து, நிலக்கடலை உற்பத்தி அதிகரித்து, வரத்தும் அதிகமாக, கடலை எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களில் கடலை எண்ணெய் விலை லிட்டர், 190ல் இருந்து படிப்படியாக, 160 ரூபாயாக சரிந்துள்ளது.
உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வருகிறது. அப்படி அதிகரித்தால் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கடலை எண்ணெய் பயன்பாடு, விற்பனை அதிகரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.