ADDED : ஜூன் 22, 2026 04:05 AM

அனுஜ் குப்தா
- அனுஜ் குப்தா -: இந்தியாவுக்கு அவ்வப்போது புதிது புதிதாக ஒரு தொழில் துறை மீது காதல் பிறந்து விடுகிறது. ஒரு காலத்தில் செமிகண்டக்டர்கள்தான் இந்தியாவின் எதிர்காலமாக இருந்தன. பிறகு,'பசுமை ஹைட்ரஜன்' எதிர்காலம் ஆனது. பின்னர் ட்ரோன்கள்; அதற்கடுத்து மின்சார வாகனங்கள்...
இப்படி ஒவ்வொரு தொழில் துறையையும் முன்னிலைப்படுத்தி, பல கோடி ரூபாய் மானியத்துடன் தொழில் கொள்கைகள் அறிவிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளை தன் பக்கம் இழுக்க, மாநில அரசுகள் போட்டி போடுகின்றன.
ஆனால், தொழில் துறை வளர்ச்சி என்பது, ஒரு 'ரியாலிட்டி ஷோ' கிடையாது. அரசுகள் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதற்கு மானியம் வழங்கி, அத்துறை சார்ந்த சில தொழிற்சாலைகளை திறந்து வைத்து, பின்னர் கைதட்டலுக்காக காத்திருக்க முடியாது.
தொழில் திறன் அவசியம் உலகின் வெற்றிகரமான உற்பத்தி நாடுகள் வேறு ஒன்றை செய்தன. அவை தொழில் துறைகளை உருவாக்கவில்லை; தொழில் திறன்களை உருவாக்கின. இந்திய தொழில் கொள்கையின் மிகப்பெரிய பலவீனம், இப்படி செய்யாததுதான்.
புதிய தொழில் துறைகளை தேர்வு செய்வதில் மத்திய அரசு அதிக நேரம் செலவிடுகிறது. ஆனால், அவற்றை வெற்றிகரமாக ஆக்கும் அடிப்படை கட்டமைப்புகள்மீது போதிய கவனம் செலுத்துவதில்லை.
ஒரு வகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவுடன் ஒப்பிடும்போது, இன்றைய இந்தியா தொழில் கொள்கையில் மிகவும் தீவிரமாக செயல்படுகிறது.
கடந்த 2014க்கு முன், நிலம் கையகப்படுத்துவது பெரிய சவாலாக இருந்தது. உள்கட்டமைப்பு வசதிகள் பலவீனமாக இருந்தன.
ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் நிச்சயமின்மை, முதலீட்டாளர்களை அச்சுறுத்தியது.
உலகின் மிகப்பெரிய தொழிலாளர் சக்தி என்ற பலம் இருந்தும், உற்பத்தி துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை. அதற்கு பின் நிலைமைகள் மாறின.
நிகழ்வல்ல, செயல்முறை தேசிய நெடுஞ்சாலைகள் வேகமாக விரிவடைந்தன. டிஜிட்டல் கட்டமைப்பு மேம்பட்டது. திவால் சட்ட சீர்திருத்தங்கள் வந்தன. உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம், தொழில் துறையை மீண்டும் கொள்கை மையமாக மாற்றியது.
குறிப்பாக, மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுஉள்ளது.
ஒரு காலத்தில் இறக்குமதியை முழுமையாக நம்பியிருந்த இந்தியா, இப்போது ஆண்டுக்கு 1.90 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்கிறது.
இவை முக்கியமான முன்னேற்றங்கள்தாம். ஆனால், இந்த வெற்றிகளின் பின்னால் ஒரு ஆழமான கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காமலேயே இருக்கிறது.
இந்தியா இன்னும் தொழில்மயமாக்கலை ஒரு 'நிகழ்வு' போலவே பார்க்கிறது. ஒரு 'தொடர் செயல்முறை'யாக பார்ப்பதில்லை.
ஒரு செமிகண்டக்டர் தொழிற்சாலை திறக்கப்படுவது உற்சாகத்தை உருவாக்கலாம். ஆனால், ஒரு முன்னேறிய தொழில் துறை பொருளாதாரம், இது போன்ற தனித்து நிற்கும் சில தொழிற்சாலைகளால் உருவாகாது.
சாதித்த தைவான் அதற்கு பின்னால் ஆயிரக்கணக்கான கண்ணுக்கு தெரியாத தொடர்கள் இருக்கின்றன. சிக்கலான இயந்திரங்களை பராமரிக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வேண்டும்; அதிநவீன உதிரிபாகங்களை தயாரிக்கும் உள்ளூர் சப்ளையர்கள் வேண்டும்.
மூலப்பொருட்களை விரைவாக நகர்த்தும் துறைமுகங்கள் வேண்டும்; தொழில் துறைக்கு ஏற்ற பொறியாளர்களை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள் வேண்டும்; நீண்ட கால ஆராய்ச்சியில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் வேண்டும்.
இவை அனைத்தும் பல ஆண்டுகள் அல்லது பல பத்தாண்டு காலத்தை எடுத்துக்கொண்டே உருவாகும். அதனால்தான், செமிகண்டக்டர் உலகின் தலைநகரமாக தைவான் மாறியது.
அந்த நாட்டில் ஏதோ ஒருநாள் காலையில் எழுந்த அதிகாரிகள், 'சிப் தயாரிப்பு தான் நம் நாட்டின் எதிர்காலம்' என்று அறிவித்ததால் அது நிகழவில்லை.
தொடர்ச்சியான தொழில் நுட்ப கல்வி, ஆராய்ச்சி முதலீடுகள், திறமையான பொறியாளர்கள், உலக தரத்திலான சப்ளையர் தொடரமைப்புகள் ஆகியவை பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்டன.
அதேபோலத்தான் தென் கொரியாவும். இப்போது உலகின் மிகப்பெரிய உற்பத்தி சக்திகளில் ஒன்றாக இருக்கும் அந்த நாடு, தொழில் கொள்கை முழக்கங்களால் வளரவில்லை. தான் மேம்படுத்தி கொண்ட திறன்களால் வளர்ந்தது.
அறிவிப்பு போதாது செமிகண்டக்டர்களை எடுத்துக்கொண்டால்கூட, நம் நாட்டில் அரசு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அந்த துறையோ, உலகிலேயே மிகவும் அதிகமாக தொழில் திறனை சார்ந்திருக்கும் துறைகளில் ஒன்று.
அதற்கு சிறப்பு ரசாயனங்கள் வேண்டும்; மிக உயர்தர பொறியாளர்கள் வேண்டும்; துல்லியமான உற்பத்தி கட்டமைப்பு வேண்டும்; இடையூறு இல்லாத மின்சாரம் வேண்டும்; ஆராய்ச்சி கூட்டணிகள் வேண்டும்.
இந்த அடுக்குகளில் ஒன்று இல்லாவிட்டாலும் போட்டித்திறன் பாதிக்கப் படும். ஒருமுறை திறன்கள் அழிந்துவிட்டால், அவற்றை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம். தொழிற்சாலைகள் மூடப்படுவது இறுதி கட்டம் மட்டுமே.
அதற்கு முன்பே கல்வி நிறுவனங்கள், தொழிலாளர் சந்தைகள் மற்றும் தொழில் சூழல் ஆகியவற்றில் சேதம் ஏற்பட்டு விடுகிறது.
இப்போது இந்தியா 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட வலுவான நிலையில் உள்ளது. ஆனால், அடுத்த கட்ட வளர்ச்சி, ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கும் ஒரு புதிய 'கவர்ச்சியான' தொழில் துறையை அறிவிப்பதன் வாயிலாக வரப்போவதில்லை.
தொழில் துறை திறன்கள்தான் பல துறைகளுக்கும் பொதுவானவை. ஒரு நல்ல துறைமுகம் அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் உதவும்; ஒரு சிறந்த தொழில்நுட்ப கல்வி அமைப்பு, அனைத்து தொழில் துறைகளுக்கும் பயன் தரும்.
திறமையான தொழிலாளர்கள், வெளிப்படையான விதிமுறைகள், நம்பகமான உள்கட்டமைப்பு ஆகியவை ஒவ்வொரு துறைக்கும் போட்டித்திறனை உருவாக்கும்.
ஒரு மானிய திட்டம் உருவாக்க முடியாத நீண்டகால பொருளாதார பலனை இவை உருவாக்கும்.
புதிய தொழில் துறைகளின் மினுமினுப்பில் கவனம் செலுத்துவதைவிட, அவற்றை தாங்கி நிற்கும் அடித்தளத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில், தொழிற்சாலைகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வர முடியும்.
ஆனால், தொழில் துறை வலிமையை நாம் தான் கட்டியெழுப்ப வேண்டும்; அதை இறக்குமதி செய்ய முடியாது.
வெறும் கொள்கை முழக்கங்களால் அந்த வலிமையை நாம் அடைந்துவிட முடியாது.
