UPDATED : அக் 27, 2026 05:57 PM
ADDED : அக் 27, 2026 05:54 PM

புதுடில்லி: சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 1,500 கிலோ பட்டாசுகள் மற்றும் 34 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
வடகிழக்கு டில்லி, கோகல்புரியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. கோகல்புரியில் சந்தேகத்துக்குரிய வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, பட்டாசு தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த தொழிற்சாலையை நடத்திய உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத், பரூக் நகரை சேர்ந்த மோகித் கோஸ்வாமி, 29, அர்மான், 24, மற்றும் சமீர், 21 ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
விற்பனைக்கு அனுப்ப தயாராக வைத்திருந்த, 880 கிலோ பட்டாசுகள் மற்றும் முழுமை பெறாத நிலையில், 600 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்தனர். மேலும், பட்டாசு தயாரிப்புக்காக வைத்திருந்த 34 கிலோ வெடிமருந்தும் சிக்கியது. பட்டாசு தயாரிப்பதற்கான காலி உறைகள், மருந்து நிரப்பும் இயந்திரம், எடை இயந்திரம் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். விசாரணை நடக்கிறது.
