தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஜெயிப்பாரா புதுமுகம் சரன்ஷ் ஜெயின்... * இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு

ஜெயிப்பாரா புதுமுகம் சரன்ஷ் ஜெயின்... * இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு

ஜெயிப்பாரா புதுமுகம் சரன்ஷ் ஜெயின்... * இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு


ADDED : ஜூலை 28, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணியில் 'ஆப்-ஸ்பின்னர்' சரன்ஷ் ஜெயின் புதுமுகமாக இடம் பிடித்துள்ளார்.

இலங்கை செல்லும் இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் (காலே, ஆக. 15-19, கொழும்பு, ஆக. 23-27) பங்கேற்கிறது. இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தொடர் என்பதால், முக்கியத்துவம் பெறுகிறது. 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சுப்மன் கில் தொடர்கிறார். துணை கேப்டனாக கே.எல்.ராகுல், இளம் ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளனர். அனுபவ 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளார்.

அறிமுக வாய்ப்பு

தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் காயத்தால் (தொடை பகுதி பிடிப்பு) அவதிப்படுவதால், புதுமுகமாக சரன்ஷ் ஜெயின் சேர்க்கப்பட்டுள்ளார். ரவிந்திர ஜடேஜா, மானவ் சுதார், குல்தீப் யாதவ் என மூவரும் இடது கை ஸ்பின்னர்கள். இலங்கை அணியில் 7 இடது கை பேட்டர்கள் இருப்பதால், வலது கை 'ஆப்-ஸ்பின்னர்' சரன்ஷ் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேட்டிங்கிலும் கைகொடுப்பதால், விளையாடும் 'லெவனில்' அறிமுகமாகலாம்.

சுதர்சன் எப்படி

பி.சி.சி.ஐ., உடற்தகுதி தேர்வில் தேறினால் மட்டுமே தமிழக வீரர் சாய் சுதர்சன், 'வேகப்புயல்' பும்ரா வாய்ப்பு பெற முடியும். சுதர்சனுக்கு மாற்றாக 3வது இடத்தில் களமிறங்க தேவ்தத் படிக்கல் உள்ளார். பும்ரா தேறாத பட்சத்தில், குர்னுார் பிரார் இடம் பெறலாம்.

இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட், சாய் சுதர்சன்*, துருவ் ஜுரல், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், பும்ரா*, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின்.

* உடற்தகுதியில் தேற வேண்டும்

11 ஆண்டு தவம்

ம.பி., யின் இந்துாரை சேர்ந்தவர் வலது கை 'ஸ்பின், ஆல்-ரவுண்டர்' சரன்ஷ் ஜெயின், 33. கடந்த 2014, டிசம்பரில் ம.பி., அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் களமிறங்கினார். 2021-22ல் ம.பி., அணி ரஞ்சி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 11 ஆண்டுகளாக உள்ளூர் போட்டியில் முத்திரை பதித்த இவருக்கு, இப்போது தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் 54 போட்டியில் 188 விக்கெட், 2223 ரன் எடுத்துள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக (காலே, 4 நாள் போட்டி), இந்தியா 'ஏ' அணி சார்பில் அசத்தினார். 70 ரன், 6 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு கைகொடுத்தார். இதன் காரணமாகவே இவரை பயிற்சியாளர் காம்பிர் தேர்வு செய்துள்ளார்.

அன்பிலே அன்பிலே

இந்த மனம் உருகுதே...

சரன்ஷ் தந்தை சுபோத் ஜெயினும் கிரிக்கெட் வீரர். ம.பி., அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியவர். பின் மகனுக்கு பயிற்சி அளித்தார். 2014ல், 21 வயதான சரன்ஷ், இந்துார் கிளப் அணி சார்பில் ஆஸ்திரேலியா சென்றார். அங்கிருந்து தந்தையிடம் பேச முயற்சித்த போது, 'அவர் பிசி' என குடும்பத்தினர் சமாளித்துள்ளனர். அவருக்கு வாய் பகுதியில் 'கேன்சர்' ஏற்பட்டிருப்பதை தெரிவிக்கவில்லை.

இது பற்றி சுபோத் கூறுகையில்,''அந்த சமயத்தில் 'ஆப்பரேஷன்' செய்ததால், எனது வாய் வீங்கியிருந்தது. இதனால் பேச முடியவில்லை. வீடு திரும்பிய சரன்ஷ், என்னை பார்த்ததும் மனம் உடைந்து அழுதுவிட்டான். அப்போது சிறிய பேப்பரை எடுத்து, 'மகனே நீ எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறாயோ; அவ்வளவு விரைவாக நான் குணமடைவேன்' என பேனாவால் எழுதி காண்பித்தேன்.

இதற்கு ஏற்ப உள்ளூர் போட்டிகளில் முத்திரை பதித்தான். அஷ்வின் தான் அவனது 'ரோல்-மாடல்'. அவரது 'வீடியோ' பார்த்து சுழற்பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுக் கொண்டான். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால், 'துணிச்சலாக விளையாடு; எவ்விதமான நெருக்கடிக்கும் பணிந்துவிடாதே' என்பதே என் மகனுக்கு நான் கொடுக்கும் 'அட்வைஸ்'.

நேற்று இந்துாரில் உள்ள ஹனுமார் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தான் சரன்ஷ். அப்போது தேர்வாளர்களிடம் இருந்து அழைப்பு வந்ததால், பேச முடியவில்லை. வெளியே வந்து தான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டதை தெரிந்து கொண்டான். நான் ரஞ்சி கோப்பையில் பங்கேற்று இருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடும் கனவு நனவாகவில்லை. தற்போது எனது ஆசையை மகன் பூர்த்தி செய்துள்ளான்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us