/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி சுவைக்கலாம் மாம்பழம்; கோவைக்கு 20 டன் வரத்து
/
இனி சுவைக்கலாம் மாம்பழம்; கோவைக்கு 20 டன் வரத்து
ADDED : பிப் 17, 2025 11:21 PM

கோவை; கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதிக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. வழக்கமாக, 5 அல்லது 6 டன் மாம்பழங்கள் வரத்து இருந்த நிலையில், தற்போது, 20 டன்னாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு பழங்கள் மொத்த மார்க்கெட்டுக்கு அனைத்துவித பழங்களும் வருகின்றன.
குறிப்பாக, மாம்பழங்கள் சேலம், புளியம்பட்டி, பொள்ளாச்சி, திண்டுக்கல், பழனி, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, 15 வெரைட்டி மாம்பழங்கள் வருகின்றன. தினந்தோறும் மாலை, 4:00 மணிக்கு கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாம்பழம் ஏலம் விடப்படுகிறது.
மாங்காய் வியாபாரிகள் சங்க தலைவர் ஜவகர் கூறுகையில், ''வழக்கமாக, ஏப்., மே மாதங்களில் மாம்பழ வரத்து அதிகம் இருக்கும். இந்தாண்டு தற்போது, வரத்து துவங்கியுள்ளது. 15 வகையான வெரைட்டி மாம்பழங்கள் 20 டன் வந்துள்ளன.
நேற்று, அல்போன்சா 150 ரூபாய், செந்துாரம் 100-120 ரூபாய், காலேபாடு 130 ரூபாய், கிளிமூக்கு 90 ரூபாய், இமாம்பசந்த் 250 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, மாம்பழ வரத்து அதிகரிக்கும்,'' என்றார்.

