/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'இயற்கை விவசாய உணவு முறை அவசியம்'; பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
/
'இயற்கை விவசாய உணவு முறை அவசியம்'; பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
'இயற்கை விவசாய உணவு முறை அவசியம்'; பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
'இயற்கை விவசாய உணவு முறை அவசியம்'; பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
ADDED : ஜன 29, 2025 10:46 PM

குன்னுார்; 'இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆரோக்கியமான உணவு உட்கொண்டு, சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிக்க, இளைய தலைமுறையினர் முன் வரவேண்டும்,' என, தேசிய பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை; தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை ஆகியவை சார்பில், குன்னுார் புனித மரியன்னை மகளிர் மேல்நிலை பள்ளியில், உணவும்; சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில், இயற்கையோடு இணைந்த உணவு தயாரிப்பு திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசியதாவது:
தற்போது, மோசமான உணவும், சுற்றுச்சூழலும் நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கை தரத்தை பாதித்து வருகிறது. சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடு முழுவதும் தேசிய பசுமைப்படை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் பள்ளிக்கு சென்ற குழந்தைக்கு 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவில் குடியரசு தினத்தில், 35 வயதான போலீஸ் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது போன்ற பாதிப்புகளுக்கு காரணம் சீரற்ற உணவும், சுற்றுச் சூழலும் ஆகும். தற்போது 'பாஸ்ட் புட்' அதிகரித்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், மனிதனுக்கு மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மிகச்சிறந்த பல்லுயிர் தன்மை கொண்ட தாவரங்கள் நம் நாட்டில் உள்ள நிலையில், இயற்கை விவசாயத்தில் விளைவிக்க கூடிய பயிர்கள் விளைவித்து ஆரோக்கியமான உணவு உட்கொண்டு சிறந்த எதிர்காலத்தை நிர்ணயிக்க, இளைய தலைமுறையினர் முன் வர வேண்டும். அது மாணவ சமுதாயத்தில் இருந்து துவங்க வேண்டும். இவ்வாறு சிவதாஸ் பேசினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மார்கரேட் ஆரோக்கிய மேரி பேசுகையில், ''தனி ஒரு மனிதனின் ஆரோக்கியம் சீரான உணவை சார்ந்து உள்ளது. பாரம்பரிய உணவு வகைகள் குறித்து அறிந்து கொண்டு வாழ்வில் பயன்படுத்துவது அவசியம்,'' என்றார்.
60க்கும் மேற்பட்ட மூலிகைகள், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு வகைகள், மாணவிகள் தயாரித்து காட்சி படுத்தினர். உணவு கண்காட்சியில், மூலிகைகள், சிறு தானியங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சமச்சீர் உணவு, மருத்துவ குணங்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து குறித்து மாணவியர் விளக்கம் அளித்தனர். தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் நான்சி பெப்பியோனா நன்றி கூறினார்.