/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாமல் மூடிக்கிடக்கும் இறைச்சி கூடங்கள்; திறந்த வெளியில் வெட்டப்படும் கால்நடைகள்
/
செயல்படாமல் மூடிக்கிடக்கும் இறைச்சி கூடங்கள்; திறந்த வெளியில் வெட்டப்படும் கால்நடைகள்
செயல்படாமல் மூடிக்கிடக்கும் இறைச்சி கூடங்கள்; திறந்த வெளியில் வெட்டப்படும் கால்நடைகள்
செயல்படாமல் மூடிக்கிடக்கும் இறைச்சி கூடங்கள்; திறந்த வெளியில் வெட்டப்படும் கால்நடைகள்
ADDED : பிப் 17, 2025 05:10 AM

மாவட்டத்தில் ஆடு, கோழி, மீன், மாடு உள்ளிட்ட இறைச்சி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. வாரத்தில் 3, 4 நாட்களுக்கு இறைச்சி விற்பனை படுஜோராக நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் இறைச்சிகள் வெட்டப்பட்டு விற்கப்படுகின்றன.
இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் திறந்த வெளியில் கால்நடைகளை வெட்டி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டோரங்களில் திறந்தவெளியில் இறைச்சியை வெட்டி வைத்து, பாதுகாப்பு இல்லாமல் விற்பனை செய்கின்றனர். அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதால் இறைச்சிகளில் துாசுபடுகிறது. கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.
தொற்று நோய் பரவும் அச்சம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, நோய் பாதித்த ஆடு, மாடு, மீன், கோழிகளை வெட்டி விற்பனை செய்யும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடும். திறந்தவெளியில் கால்நடைகளை வெட்டும் போது சிறுவர்கள் பார்க்க நேரிட்டால் மனதளவில் பாதிக்கக் கூடும். ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை வெட்டி விற்பனை செய்யும் போது நோய் பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய கால்நடை டாக்டர் பரிசோதித்து அனுமதித்த பின்னரே இறைச்சிக் கூடங்களில் வைத்து முறையாக வெட்ட வேண்டும்.
இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.பல லட்சம் செலவில் பல்வேறு இடங்களில் இறைச்சி கூடங்கள் கட்டப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இறைச்சி கூடங்கள் செயல்படாமல் மூடி கிடக்கின்றன. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ளாட்சி அமைப்புகளும் இதனை கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான இடங்களில் வண்டிகளில் வைத்து கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்கின்றனர். இதனை வாங்கி சமைத்து சாப்பிடும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தரமான இறைச்சிகள் வழங்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இறைச்சி கூடத்தில் வெட்டப்பட்டு விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் திருப்தியுடன் வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.