நடுங்கும் குளிரில் நடைபயிற்சி கூடாது முதியோர், இதய நோயாளிக்கு அறிவுரை
நடுங்கும் குளிரில் நடைபயிற்சி கூடாது முதியோர், இதய நோயாளிக்கு அறிவுரை
ADDED : நவ 05, 2024 10:08 PM
சென்னை:“குளிர் காலத்தில் முதியோர், இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், நடுங்கும் குளிரில் அவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம்,” என, அரசு பொதுநல டாக்டர் பரூக் அப்துல்லா கூறினார்.
இதுகுறித்து, டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:
இதய ரத்தநாள அடைப்பு உள்ள ஒருவர், குளிர்ச்சியான காற்றில் செல்லும் போதோ அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கும் போதோ உடலின் வெப்பநிலை வெகுவாக குறையும்.
பொதுவாக உடலானது குளிர்ந்து விட்டால், அதை ஈடு செய்யவும், வெப்பமாக்கவும் அதிக ஆக்சிஜன் தேவை. அதற்காக இதயம் வேகமாக துடிக்கும்.
ஏற்கனவே இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு, உடலின் இச்செயல் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சீரற்ற இதய துடிப்பு ஏற்படுவதால், இதய செயல்பாடுகள் முடங்க வாய்ப்புஉள்ளது.
மேலும், மது, புகை பழக்கம் உள்ளோருக்கும், முதியோருக்கும் அத்தகைய வாய்ப்பு பல மடங்கு அதிகம். எனவே, குளிர் காலங்களில் இதய பாதிப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள், வெதுவெதுப்பான நீரில் தான் குளிக்க வேண்டும்.
பனிப்பொழிவு இருக்கும்போது முதியோர், இதய பாதிப்பு உள்ளோர் வெளியில் சென்று நடுங்கும் குளிரில் நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டினுள்ளேயே முறையான நடைபயிற்சி, ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடித்து, மது, புகை பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் வகையில், கம்பளி ஆடையை அணியலாம்.
நெஞ்சு பகுதியில் வலி, சுவாசிப்பதில் சிரமம், மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டால், உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.