PUBLISHED ON : பிப் 08, 2026

செய்தி: மாடு மேய்க்கச் சென்ற 41 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!
அநீதி: தாயை இழந்து நிற்கும் பட்டதாரி மகள்களுக்கு வாழ்வாதார உத்தரவாதம் அளிக்காத அரசு!
முதல்வரே... மனசாட்சியோடு சொல்லுங்கள்... தங்களது ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா; 'ஆம்' என்று நீங்கள் சொன்னால், எங்கள் வாழ்வை புரட்டிப் போட்ட நிகழ்வை நினைவூட்ட வேண்டியது எங்கள் கடமை!
ஜூலை 14, 2025 அன்று மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை அழைத்துவர கிளம்பிய எங்கள் தாய் வீடு திரும்பவில்லை. நான் புதுக்கோட்டை காரணியானேந்தல் கிராமத்து தீனுஷா பானு; இவள் என் தங்கை சவுரின் நவுபியா; சிறுவயதிலேயே தந்தையை இழந்த எங்களை பால் வியாபாரம் செய்து ஆளாக்கியது எங்கள் தாய் பர்வீன் பானு.
அவர் வீடு திரும்பாத மறுநாள் காலை, கருங்குழிக்காடு கண்மாயில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் எங்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்க, சொன்னபடியே எனக்கு நாகுடி அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணியும், நிவாரணத்தொகையாக மூன்று லட்ச ரூபாயும் தந்தது உங்கள் அரசு. ஆனால்...
அறந்தாங்கி எம்.எல்.ஏ., எஸ்.டி.ராமச்சந்திரன், 'இக்குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் நிரந்தர அரசுப்பணி வழங்கிட வேண்டும்' என தங்களுக்கு கடிதம் வாயிலாக செய்த பரிந்துரை, இன்னும் தங்கள் பார்வை படாமலேயே இருக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட இத்தருணத்தில் மீண்டும் கேட்கிறேன்...
தமிழக பெண்களின் நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் தரும் ஆட்சியா உங்கள் ஆட்சி?

