
'என் இசையை பாராட்டுவது என்பது, 'நீங்கள் நன்றாக மூச்சு விடுகிறீர்கள்' என்று சொல்வதைப் போன்றது' - 'பாராட்டை எவ்வாறு கடக்க வேண்டும்' என்று இப்படி வகுப்பெடுத்த இளையராஜாவிடம் பதில் கேட்கிறது தமிழகம்...
1. 'திறமைங்கிறது வித்வத்வம், பண்டித்துவம்; அது, கர்வத்தை மட்டுமே வளர்க்கும்' என்று சிங்கமாய் கர்ஜிக்கும் நீங்கள், 'அரசு பாராட்டு விழா'வை அதீதமாய் ஆராதனை செய்ததில் எங்கள் மனம் புண்பட்டதை அறிவீர்களா?
2. 'ஈகோ இல்லாமல் எப்படி வேலை செய்வது' என்று கேட்பவர் நீங்கள்; மக்கள் பணத்தில் நிகழும் விழாவில் 'இங்கே இசைக்கப்படுபவை முதல்வரது விருப்ப பாடல்கள்' என அன்று கமல் சொன்னதும் எப்படி உணர்ந்தீர்கள்?
3. 'ஒழுக்கத்துடன் இளையராஜா போல் பயணப் பட்டால் அவருக்கு கிடைத்த இறையரு ளில் சிறிதேனும் நமக்கு கிடைக்கும்' என்பது தங்கள் ரசிகர்களில் பலரது நம்பிக்கை ; 'பீர் ப்ளாஷ்பேக்' சொல்லி இதை நொறுக்கியது ஏன்?
4. 'உமது இசையால் என் உயிர் உருகி, ததும்பி, உருள்கிறது பாரும்' என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் விழி கசிந்து நிற்பதை பார்த்தவர் நீங்கள்; அன்றைய 'பாராட்டு விழா' அரங்கம் இப்படியான உள்ளங்களினால் நிரம்பி இருந்ததா?
5. 'ஆன்மிகமும் இசையும் வேறு வேறல்ல... ஒன்றுதான்' என நீங்கள் சொல்கிறீர்கள்; ஆனால், ஜானி திரைப்பட இசையமைப் பின் போதுதான், அந்த 'போதை' சம்பவம் நிகழ்ந்ததாக ரஜினி சொல்கிறார்; இரண் டில் எது உண்மை?
6. 'ஆஸ்கர் தந்து உலகம் அங்கீகரித்த இசை யமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்' என்று புகழ்ந்த நீங்கள், 'உலகம் கண்டிராத இப்படி ஒரு பாராட்டு விழாவிற்கு அவரை கண்டிப்பாக அழையுங்கள்' என்று அரசிடம் வேண்டுகோள் வைத்தீர்களா?
7. இத்தனை சாதித்தபின்னும், 'இசை' வரையறைக்குள் அடங்கும் அனைத்தையும் தேடிவரும் ஞானியாக சொல்லுங்கள்; அன்று, கமலின் இசைமொழி தவிர்த்து நிகழ்ந்தவை யாவும் 'பாராட்டு' வரையறைக்குள் அடங்குமா?
7 ½ ' கண்ணீர்' - இதனை மிஞ்சிய பாராட்டு எது?