PUBLISHED ON : நவ 16, 2025

மனம் சொல்லும் தவறை ஏற்க மறுப்பவனின் சரிதம்!
மனக்கண்ணாடியில் தன் நிஜத்தை பார்த்தபிறகு முளைவிடும் குற்றவுணர்வை கிள்ளி எறியும் ஒருவனே இக்கதையின் நாயகன். மனதில் வேர் பிடித்துவிட்ட குற்றவுணர்வு, அவன் குணத்தில் கலந்து வெவ்வேறு ரூபங்களில் மீண்டும் மீண்டும் துளிர்க்க, இறுதியில் வெல்வது அவனா... குற்றவுணர்வா?
'இயக்குனர் - நடிகர்' இடையிலான 'ஈகோ' போட்டியாகத் துவங்கும் கதை, இடைவேளையில் 'யார் அந்த கொலையாளி' என்ற கட்டத்திற்கு தாவுகிறது. க்ளைமாக்ஸில், 'ஒரு மனுஷன் என்னெல்லாம் பண்றான் பாருங்க' என்று அங்கலாய்ப்பு கொள்கிறது. இதற்கு மத்தியில் சமுத்திரக்கனியும், துல்கர் சல்மானும் தங்களது 'குரு - சிஷ்யன்' சண்டையால், 'சபாஷ்... சரியான போட்டி' என்று சொல்ல வைத்து, திரைக்கதையில் பொங்கி நிற்கும் நாடகத் தன்மையின் மேல் நீர் தெளிக்கின்றனர்!
'தென்னை மரத்துல ஒரு குத்து... பனை மரத்துல ஒரு குத்து' எனும் அளவிலேயே காட்சிகள் இருப்பதால், திரைக்கதையில் நாயகி ஏற்படுத்தும் முக்கிய தாக்கத்திற்கு பலனில்லை! மனிதனின் தாழ்ந்த புத்தி சொல்ல ஒரு கோடு வரைந்த இயக்குனர், மனித புத்தியின் மேன்மை சொல்ல கோடு போடாததால், ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை!
மனித உளவியலை சுற்றி பின்னப்பட்டுள்ள இக்கதையின் வசனங்களில் நல்ல அழுத்தம். கண்ணாடி முன் துல்கர் நடிக்கும் காட்சிக்குள், படைப்பின் சாராம்சத்தை அடக்கியவிதம் சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை பிரமாண்டமான ஒளிப்பதிவுக்கு வலு சேர்த்து இருக்கிறது.
புதுமைகளை முயற்சிக்கும் துல்கர் சல்மானின் திரைப்பட பட்டியலில் இப்படம் அவருக்கு பெருமை சேர்க்கலாம். ஆனாலும், நம் ரசனையின் உச்ச இலக்கை இப்படைப்பு தொடவில்லை.
ஆக...
மனம் குடையும் குற்றவுணர்வின் தாக்கம் சொல்ல வந்து நம் குறட்டைக்கு காரணமாகும் கதை!

