மாற்றுத்திறனாளிகள் உருவாவதை தடுக்க மருத்துவ மையம்!
மாற்றுத்திறனாளிகள் உருவாவதை தடுக்க மருத்துவ மையம்!
PUBLISHED ON : டிச 21, 2025

குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் முகம் பார்த்து சிரிக்கும். நான்கு மாதங்களில் தலை நிற்கும். 8 மாதங்களில் யார் துணையும் இல்லாமல் உட்காருவதும், 12 மாதங்களில் நிற்பதும் ஒரு குழந்தையின் இயல்பான வளர்ச்சி. குறிப்பிட்ட மாதங்களில் அந்த 'மைல் ஸ்டோனை' குழந்தை அடையவில்லை என்றால், போக, போக சரியாகி விடும் என அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.
அந்த குழந்தைக்கு, இயல்பான செயல்பாடுகளுக்கான துாண்டுதல் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை டிபெக்ட், டெபிசியன்சிஸ், டிசீசஸ், டெவலப்மென்டல் டிலேஸ், சுருக்கமாக 4டி என்று சொல்லுவோம்.
குறித்த காலத்தில் இந்த வளர்ச்சியை குழந்தை அடையவில்லை என்றால் மாற்றுத்திறனாளியாக உருவாகும் நிலை ஏற்படும். இதற்காகவே ஆரம்பநிலை பரிசோதனை அவசியம்.
அரசு மருத்துவமனைகளில், தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட ஆரம்பநிலை இடையீட்டு மையங்களில், இதற்கான பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
இம்மையத்தின் நோக்கமே மாற்றுத்திறனாளிகளும், சிறப்புக் குழந்தைகளும் உருவாகாமல் தடுப்பதுதான்.
இதில் பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் ஆரம்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
பிறவிக் குறைபாடுகள், ஊட்டச்சத்து, வைட்டமின் குறைபாடுகள், சில வகை மரபியல் கோளாறுகள், நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் ஆகிய நான்கையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணமாக்கவோ, குறைந்தது நிரந்தர மாற்றுத்திறனாளி ஆகாமல் தடுக்கவோ முடியும்.
தற்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள இம் மையங்களில், 770 நடமாடும் மருத்துவக் குழுக்கள் இருக்கின்றன.
இவற்றில், ஆண் மருத்துவர் தலைமையில் ஒரு குழுவினரும், பெண் மருத்துவர் தலைமையில் மற்றொரு குழுவினரும் செயல்படுகின்றனர்.
இவர்கள், அங்கன்வாடி, அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை செய்து, 4டியில் ஏதேனும் ஒன்று கண்டறியப்பட்டால், சிகிச்சை அளிப்பார்கள். மேல் சிகிச்சைக்காக அந்தத்த மாவட்ட மருத்துவக் கல்லுாரிகள் நிறுவியுள்ள மாவட்ட மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்த மையத்தில் ஒவ்வொரு குறைபாட்டிற்கும் அந்தந்த துறை சார்ந்த புறநோயாளிகள் பிரிவிற்கு குழந்தைகள் அலைய வேண்டியதில்லை. அனைத்து வகை சிகிச்சைகளும், பரிசோதனைகளும் ஒரே இடத்திலேயே தரப்படும்.
இதற்காகவே குழந்தைகள் நல மருத்துவர், மருத்துவ அலுவலர், குழந்தைகள் நல பல் மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், செயல்முறை திறன் பயிற்சியாளர், பேச்சு பயிற்சியாளர், செவித் திறன் மதிப்பீட்டாளர், விழி ஒளி பரிசோதகர், சிறப்பு ஆசிரியர், ஆய்வக தொழில்நுட்பனர், மனநல ஆலோசகர், பல் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் அடங்கிய 14 பேர் கொண்ட குழு உள்ளது.
இவர்கள் குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சைகளுடன், வளர்ச்சி துாண்டுதல் பயிற்சி, பிரைன் பிளாஸ்டிசிட்டி அல்லது நியூரோ பிளாஸ்டிசிட்டி எனப்படும் இயல்பாக மூளையின் செயல்பாடுகளை உணரச் செய்யும் பயிற்சியை 2 வயதுக்கு முன்பே தருவதால், ஐம்புலன்களையும் துாண்டி, நரம்பியல் வளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம், கவனக்குறைவு ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு, மூளைவாதம் போன்றவற்றை சரி செய்ய முடியும்.
அவசியம் ஏற்பட்டால், உயர் சிகிச்சை, காப்பீட்டு திட்டத்திற்கான வழிகாட்டுதலையும் இம்மையம் செய்யும்.
இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. பொது மக்கள் இந்தச் சேவையை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை, குழந்தைகள் நல மருத்துவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர் 9444475309sppillai26@yahoo.co.in

