வலியில்லாத முதுமைக்கு வழி சொல்கிறார் மனநல டாக்டர்
வலியில்லாத முதுமைக்கு வழி சொல்கிறார் மனநல டாக்டர்
PUBLISHED ON : ஜூன் 07, 2026

வலியோடு தான் வாழ்கிறேன் என கண்ணீரோடு வருபவர்கள் அதிகரித்துவிட்டதாக கூறும் மனநல மருத்துவர் மோனி, அதற்கு தீர்வும் அளிக்கிறார்.
அவர் பகிர்ந்தவை:
வயது மூப்பால் ஏற்படும் மன அழுத்தம், மன சோர்வு, குழப்பம், பயம், பதட்டம், குற்ற உணர்வு போன்ற பல்வேறு உளவியல் ரீதியான பிரச்னைகள், உண்மையாகவே உடல் வலியாக, உபாதையாக உருமாறும் நிலைதான் சோமாட்டைசேஷன் (Somatization).
மன அழுத்தம் அதிகமாகும் போது, நம் மூளை, கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை அதிகம் சுரக்கிறது. அச்சமயத்தில் பிறரிடம் பகிராமலோ, அழுது புலம்பி வெளிப்படுத்தாமலோ இருந்தால், உடல் அதை தசைப்பிடிப்பு, ரத்தநாள சுருக்கம், தீவிர வலியாக மாற்றிக் கொள்ளும்.
இதனால் எந்த உடல் பாதிப்பும் இன்றி வலி ஏற்படும். இந்த அறிகுறிகளுக்கு, மனநல சிகிச்சை தான் தீர்வு.
எப்படி குணப்படுத்துவது?
எந்தமாதிரியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பொறுத்தே சிகிச்சை முறை அமையும். முதலில் வயதானவர்கள் வீட்டில் இருந்தால், அவர்களை உதாசீனப்படுத்தாமல், மரியாதையுடன் நடத்த வேண்டும்.
வீட்டின் முக்கிய முடிவுகளை கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களுடன் பேச நேரம் ஒதுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர் கள் ஆன்மிக விஷயங்களில் ஈடுபட்டால் மன அழுத்தம் குறையும்.
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே, அவர்களின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.
இத்துடன் சில மனநல பாதிப்புகளுக்கு, மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வேண்டியிருக்கும். இதை செய்தாலே, முதுமையில் வலியின்றி, சுகமாக வாழ முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
