PUBLISHED ON : மே 17, 2026

ஆங்கில மருந்துகளுடன் சித்த மருத்துவமும் இணையும் போது, விரைவில் நோய்கள் குணமாகும் என்கிறார் சோமனுார் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரும், சித்த மருத்துவருமான டாக்டர் ஜெயந்தி.
சித்த மருத்துவத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?
கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நுரையீரல் இயக்கத்தை சீராக்கவும், நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீவை பலரும் எடுத்து கொண்டனர். இத்துடன் ஆங்கில மருந்துகளையும் சாப்பிடும் போது, சீக்கிரம் குணமாவதை கண்கூட பார்த்தனர்.
சித்த மருத்துவம் என்பது வாழ்வியலோடு தொடர்புடையது. நம்மை சுற்றியுள்ள மூலிகை இலை, வேர், காய், கீரைகள், பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆறு மாத குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் இம்மருந்து சாப்பிடலாம். வாதம், பித்தம், கபம் ஆகிய உடல் தன்மைகளுக்கு ஏற்ப மருந்துகள் கொடுக்கிறோம்.
குழந்தைகளுக்கான சிகிச்சை முறை பற்றி?
ஆறு மாதத்திற்கு பிறகு, 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜாதிக்காய், மாசிக்காய் உள்ளிட்ட சில பொருட்கள் கலந்து உரைமருந்து தருகிறோம். அரசு மருத்துவமனையில் இது கிடைக்கும்.
நரம்பு வலுப்படுத்த, நினைவுத்திறனுக்கு வல்லாரை சூரணம்; கால்சியம் குறைபாடு இருந்தால், நெல்லிக்காய் லேகியம், பிரண்டை; இரும்பு சத்து குறைபாட்டுக்கு மாதுளை மனப்பாகு மற்றும் கழிவுகளை வெளியேற்ற வாரத்திற்கு ஒருமுறை தேன்கலந்த திரிபலா சாப்பிடலாம்.
பெண்களுக்கு, தைராய்டு, பி.சி.ஓ.டி., தாமத குழந்தை பேறு மற்றும் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து வகையான பாதிப்புகளுக்கும், சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு கூட, ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளும் சேர்த்து சாப்பிட்டால், நோயின் வீரியம் குறையும். உள்ளுறுப்புகள் பலம் பெறும்.
சித்த மருந்துகளை சிலர் தயாரிப்பதாக விளம்பரப்படுத்துகின்றனர். மக்கள் யாரை அணுகுவது சிறந்தது?
யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலர் மூலிகை இலைகளை காட்டி, மருந்து தயாரிப்பதாக கூறுகின்றனர். சித்த மருத்துவர் அல்லாதவர்களிடம் சிகிச்சைக்கு செல்ல கூடாது.
எந்த மருந்தையும், தாமாகவே சாப்பிடுவது எதிர்விளைவுகளை உண்டாக்கலாம் அல்லது அந்நோய் குணமாவது தடைப்படலாம். சித்த மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறுவதே சிறந்தது.
- டாக்டர் பி.ஜெயந்தி எம்.டி. (சித்தா)98943 51037drjayanthip@gmail.com
