இதய ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்!
இதய ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்!
PUBLISHED ON : செப் 29, 2026

இதய ஆரோக்கியத்திற்கான தெளிவான, ஆதார அடிப்படையிலான பரிந்துரைகளை அமெரிக்க இதய சங்கம் வழங்குகிறது.
* ஆரோக்கியமான எடையை பராமரிக்க, உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும்.
* நாள்தோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவில் இடம் பெறுவது அவசியம்.
* ஒவ்வொரு முறையும் போதுமான அளவு முழு தானியங்களில் செய்த உணவு நம் தட்டில் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்.
* மொத்த தினசரி கலோரிகளில் நிறைவுற்ற கொழுப்பு வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது நல்லது.
அதிலும் டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.
* ஒமேகா--3 நன்மைகளுக்காக வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது மீன்களை, குறிப்பாக எண்ணெய் நிறைந்த மீன்களை சாப்பிட வேண்டும்.
* தினசரி உணவில் உப்பு - சோடியத்தின் அளவு 1.5 - 2.5 கிராமுக்கு அதிகமாகாமல் இருப்பது சிறந்தது. நம் நாடு வெப்ப மண்டல பூலோக அமைப்புடையது. எனவே, வியர்வையில் உப்பு அதிக அளவில் வெளியேறும். ஒரு நாளைக்கு 5 கிராம் வரை உப்பு உணவில் சேர்ப்பது பிரச்னையாக இருக்காது. உலக சுகாதார மையமும் இதைத் தான் வலியுறுத்துகிறது.
* பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளைக் குறைத்து, தினசரி கலோரிகளில் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உணவு என்பது வெறும் எரிபொருள் மட்டுமல்ல; அது இதயத்திற்கான ஒரு வகை மருந்து பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கொழுப்புள்ள பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், காய்கறிகள், கொழுப்பு குறைந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது, மாரடைப்பு நோயின் அபாயத்தைக் குறைக்கும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், தனிநபர்கள் நீண்டகால இதய ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க முடியும்.
நோய் மற்றும் இளம் வயது இறப்பை தடுக்க, நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும்.
