PUBLISHED ON : மார் 08, 2026

மன அழுத்தம், பதற்றம், போன்ற மனநல பிரச்னைகளுக்கு, அதற்கான சிகிச்சையோடு சேர்த்து, ஆர்ட் தெரபியும் சில மருத்துவ மையங்களில் தரப்படுகிறது.
ஓவியம், வண்ணம் தீட்டுவது என்று ஏதாவது ஒரு கலையில் அவர்களை ஈடுபடச் செய்வது, மனநல பிரச்னை களுக்கு தீர்வாக அமைவதாக கூறுகின்றனர்.
பிரச்னை இருப்பவர்களுக்கு எல்லாம், ஆர்ட் தெரபி செய்தால் சரியாகி விடும், என்று சொல்ல முடியாது. இது ஒரு 'சப்போர்டிங் சிஸ்டம்' என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆர்ட் தெரபி பயன்படுத்து ஏன்?
நம்முடைய ஆழ் மனதில், தீர்க்க முடியாத பல பிரச்னைகள், சிக்கல்கள் பதிந்து இருக்கும். உதாரணமாக, குழந்தைப் பருவத்தில் நடந்த விரும்பத் தகாத சம்பவங்கள், விபத்து, பாலியல் தொந்தரவுகள், அதிர்ச்சி, சோகம், பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதன் பாதிப்பு நம் ஆழ் மனதில் வடு போல பதிந்து போயிருக்கும்.
மன அழுத்தம் உட்பட ஏதோ ஒரு மன நல பாதிப்பு இருப்பவர்களிடம், மனநல ஆலோசகரோ, மருத்துவரோ பேசும் போது, 100 சதவீதம் உண்மையை யாராலும் சொல்ல முடியாது. பல நேரங்களில், தீர்க்க முடியாமல், ஆழ் மனதில் புரையோடியிருக்கும் பிரச்னைகளை வெளியில் சொல்ல முடியாமல் போகலாம். எல்லா விஷயங்களையும் பேச கஷ்டப்படலாம். ஆழ் மனதில் இருக்கிற தீர்க்க முடியாத சிக்கல்கள் வெளியில் வராமலேயே போகலாம்.
அப்படிப்பட்டவர்களுக்கு, மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலாக இது இருக்கிறது. வரைவதற்கு அல்லது பெயிண்டிங் செய்வதற்கு, தேர்வு செய்யும் நிறங்கள், வரையும் கருப் பொருள் இவற்றைக் கொண்டே, தேர்ந்த மனநல மருத்துவரால், பிரச்னை இருப்பவர்களின் ஆழ் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்; பிரச்னைக்கு வழி காட்டலாகவும் உதவியாக இருக்கும்.
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையால், உதாரணமாக, மனதில் நினைப்பதை எல்லாம், வெளியில் சொல்லி விட முடியாது. சரியான வார்த்தைகளைத் தேர்வு செய்து உணர்வுகளை வெளிப்படுத்துவது குழந்தைக்கு சிரமம். 'உன் குடும்பத்தை வரைந்து கொடு' என்று குழந்தையிடம் சொல்லும் போது, உடனே, அம்மா, அப்பா, அவர்களின் அரவணைப்பில் இருக்கும் குட்டி குழந்தை, தனியாக நிற்கும் வளர்ந்த குழந்தை, என்று வரைந்தால், தன்னை தனிமையாக உணர்கிறது என்பது எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
அதே குழந்தையிடம் பேசும் போது, 'உனக்கு யார் பிடிக்கும்?' என்று கேட்டால், அப்பா, அம்மா அல்லது யாரோ ஒருவரைச் சொல்லும். வரையும் போது, அதன் மனதில் இருக்கும் உண்மை எளிதாக வெளிப்படும்.
பிரத்யேக பயிற்சி தரப்படுமா?
மனநல பிரச்னையில் இருப்பவர் களுடன் பேசும் போது, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை கேட்டு, ஏதோ ஒரு கலையில் ஆர்வம் இருப்பது தெரிந்தால், அதில் ஈடுபடச் சொல்வது டாக்டர். பயிற்சி தருவதற்கு பயிற்சி பெற்ற, ஆர்ட் தெரபிஸ்ட் இருக்கின்றனர்.
பிரச்னையிலிருந்து வெளியில் வர, பயன்படும் ஆர்ட் தெரபி, பல நேரங்களில், அவர்களின் பொழுது போக்காக மாறி விடும். பலர் இதையே தங்களின் விருப்பமான துறையாக எடுத்து, முழு நேரக் கலைஞர்களாக மாறியிருக்கின்றனர்.
உணர்வுகளை வெளிப்படுததக் கூடிய, கற்பனை வளத்தை வெளிக் கொணரக் கூடிய எந்த கலையாக இருந்தாலும், ஆர்வத்தைப் பொறுத்து செய்கின்றனர்.
அனைவருக்கும் ஆர்ட் தெரபி பலன் தருமா?
அப்படி சொல்ல முடியாது. பிரச்னை இருப்பவர்கள், முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதை செயல்படுத்த முடியும். அடிக்கடி மனநிலை மாறுவது, பதற்றம் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். ஓவியம், இசை, நடனம் என்று கலைகளில் ஆர்வமே இல்லாதவர்களும் உள்ளனர். அவர்களுக்கு பலன் தராது.

