
எனக்கு மாதவிடாய் நாட்களில் கடும் வயிற்றுவலி, உதிரப்போக்கு உள்ளது.
அம்மாவுக்கு 60 வயதாகிறது. அடிக்கடி மூட்டு வலி, இடுப்பு வலியால்
அவதிப்படுகிறார். இதற்கு என்ன பரிசோதனை செய்ய வேண்டும்.
- -புவனேஸ்வரி, மதுரை
வயதைப்பொறுத்து மாத விடாய் நாட்களில் வெவ்வேறு காரணங்களால் வயிற்றுவலி,
உதிரப்போக்கு அதிகமாக வரலாம். முக்கியமாக கர்ப்பப்பை கட்டி,
'எண்டோமெட்ரியோசிஸ் ஹார்மோன்' பிரச்னைகளையும் காரணமாக சொல்லலாம். டாக்டர்
ஆலோசனையின் பேரில் ஸ்கேன் செய்வது நல்லது.
உங்கள் அம்மாவுக்கு
வயோதிகம் மற்றும் மாதவிடாய் நின்றதால் வரும் எலும்பு தேய்மானத்தினால்
மூட்டுவலி வரலாம். எக்ஸ்ரே, பி.எம்.டி., மற்ற பரிசோதனைகள் மேற்கொள்ள
வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த கால்சியம் மாத்திரைகளை சாப்பிடலாம்.
நடைப்பயிற்சியுடன் சிறு சிறு உடற்பயிற்சி செய்யலாம்.
- டாக்டர் ரேவதி ஜானகிராம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர், மதுரை
என்
மகளுக்கு 19 வயது ஆகிறது. பல் கூச்சத்தால் அவதிப்படுகிறாள். இது எதனால்
ஏற்படுகிறது? என்ன மாதிரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்?
- தனலட்சுமி, நத்தம்
பல் கூச்சம் என்பது பற்களின் வேர்பகுதிகளில் இருக்கும் நரம்புகள்
பலவீனமடைந்து ஈறுகளில் பிரதிபலிக்கும். கிருமிகளின் தொற்று, பற்களின்
சிதைவு அல்லது அதிக செறிவு மிகுந்த பேஸ்ட், நிறைய அமிலங்கள் உள்ள
குளிர்பானங்கள் குடிப்பதால் இது போன்று கூச்சம் வரும்.
இதிலிருந்து விடுபட தினமும் காலை, இரவு மென்மையான முறையில் பல் துலக்க
வேண்டும். வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரை வைத்து வாயை கொப்பளிக்கலாம்.
இது கிருமிகளை அழித்து ஈறுகளை பலப்படுத்தும். தேங்காய் எண்ணெய், கிராம்பு
எண்ணெய் போன்ற இயற்கை மாற்று மருந்துகளை கொண்டு ஈறுகளில் மெதுவாக மசாஜ்
செய்யலாம்.
அதிகமான நேரம் பல் துலக்குவது, தவறான பல் துலக்கி பயன்படுத்துவது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களையும் தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் கவுதம் செந்தில் பல் மருத்துவர் நத்தம்
பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமல் எதனால் வருகிறது. வராமல் சரி செய்வது எப்படி.
- - ஆர்.கிருத்திகா, போடி
பனிக்காலத்தில் உடல் குளிர்ச்சி அடைவதுடன், குழந்தைகளுக்கு எளிதில்
மூக்கில் நீர் வடிதல், சளி, காய்ச்சல், இருமல் ஏற்படுகிறது. இதனை தடுக்க
குழந்தைகளை காலை, இரவு நேரங்களில் வாகனங்களில் வெளியிலும், மலைப்பகுதி,
கூட்ட நெரிசலில் அழைத்து செல்ல கூடாது. பெரும்பாலும் மாஸ்க் அணிந்து கொள்ள
வேண்டும். வெளியே சென்று வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவிட வேண்டும்.
குளிர்ந்த நீர், தயிர், மோர், எலுமிச்சை, அன்னாசி, கிரேப், சாத்துக்குடி
பழங்களை கொடுக்க கூடாது. பனிக்காலத்தில் சூடான நீரை பருக வேண்டும். அசைவ,
கார உணவுகளை உண்ணலாம்.
குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை
எதிர்ப்பு சக்தியை உருவாக்கக் கூடிய ப்ளு ஊசி, நிமோனியா தடுப்பூசி
போட்டுக் கொள்ள வேண்டும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை
மருத்துவமாக துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிதளவு கொடுப்பதன் மூலம்
எதிர்ப்பு சக்தி மட்டும் இன்றி சளி, இருமல், காய்ச்சல் வருவதை
கட்டுப்படுத்தலாம்.
- -டாக்டர்.எஸ்.ரவீந்திரநாத் தலைமை மருத்துவ அதிகாரி அரசு மருத்துவமனை போடி
எனது 10 வயது மகனுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க எவ்வாறு தற்காத்து கொள்வது.
- சி. நடராஜன், ராமநாதபுரம்
மெட்ராஸ் ஐ எனப்படும் கண் விழி வெண்படல அலர்ஜி ஒரு வைரஸ் நோய்த் தொற்று.
ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மையுடையது. இரண்டாம் நிலை
பாதிப்பாக பாக்டீரியா தொற்று ஏற்படும். இதன் அறிகுறியாக கண்கள் சிவந்து,
நீர் தேங்கி காணப்படும். ஒருவரின் கண்ணை பார்ப்பதால் பரவாது. மெட்ராஸ் ஐ
நோய் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருளை தொடுதல் மூலம் பரவும்.
சுயகட்டுப்பாடு மூலம் எளிதில் குணமடையும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு
வந்தால் அனைவருக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் மெட்ராஸ் ஐ
பாதிக்கப்பட்ட நபர் ஒரு வாரத்திற்கு தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்.
- எஸ். ஆனந்தன் துணை பேராசிரியர் கண் மருத்துவப் பிரிவு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை
ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்காலத்தில் எப்படி உடலை பராமரிப்பது
- பாலமுருகன், சிவகங்கை
சளி, காய்ச்சல், நிமோனியா உள்ளிட்டவை குளிர்காலத்தில் தான் ஏற்படுகிறது.
துாசி, பூச்சிகள், பூஞ்சை மற்றும் செல்லப்பிராணி ஆகியவற்றால் ஒவ்வாமை
உள்ளவர்கள் குளிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஒவ்வாமை
ஆஸ்துமாவைத் துாண்டும். இதனால் ஆஸ்துமா உள்ளவர் சளி காய்ச்சல் அல்லது
நிமோனியாவால் பாதிக்கப்படும் போது சுவாசப் பிரச்னை அதிகரிக்கும். இரவு
தொடர்ச்சியான இருமல் இருக்கும். சிறிய உடற்பயிற்சி செய்தாலே காற்றை
சுவாசிக்க சிரமப்படுதல். மார்பில் அழுத்தம், மூச்சுத் திணறல், மிகுந்த
சோர்வு இருக்கும். உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். எளிதில்
செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
- டாக்டர் வெங்கடேஷ் நுரையீரல் சிகிச்சை நிபுணர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சிவகங்கை
என்
குழந்தைக்கு வயது 5 மாதம். இன்குபேட்டரில் பாதுகாக்கப்பட்ட குழந்தை
என்பதால் கவனமாக வளர்க்கிறோம். தற்போது மழை பெய்வதால் என்னென்ன பாதுகாப்பு
செய்ய வேண்டும் .
- - கதீஜா பீவி, விருதுநகர்
மழைக்காலங்களில் வைரஸ் கிருமி தொற்று அதிகம் இருக்கும். கை கழுவும்
பழக்கத்தை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இந்நேரங்களில் குழந்தைகளுக்கு
'பிரான்கியூலிட்டிஸ்' எனும் நுரையீரல் சுருக்கத்தை ஏற்படுத்தும் நோய்
எளிதில் பரவும் வாய்ப்புள்ளது. வென்டிலேட்டர் துணையோடு சுவாசம் பெற்றிருந்த
குழந்தையாக இருந்தால் பரவும் வாய்ப்பு இன்னும் அதிகம். மூத்த குழந்தை
பள்ளிக்கு செல்பவராக இருந்தால் சளி ஏற்பட்டு அந்த கையோடு தொட்டால் அது
குழந்தைகளையும் பாதிக்கும். பெரும்பாலும் முகத்திற்கு கையை கொண்டு செல்லக்
கூடாது. கதவின் கைப்பிடி உள்ளிட்ட பொது இடங்களில் கைகளை வைத்த பின்
சானிடைசர் பயன்படுத்த வேண்டும். கைக்குட்டை பயன்படுத்தி தும்ம வேண்டும்.
பெரியவர்களுக்கு சளி, மூக்கு தொண்டையோடு நின்று விடும். ஆனால்
குழந்தைகளுக்கோ நுரையீரல் வரை சென்று விடும். தொற்று அதிகரித்து இளைப்பு
துவங்கி விட்டால் 'ஹை ப்ளோ நாசல் கேன்னுலா' தெரபி மூலம் சிகிச்சை
அளிக்கலாம்.
- டாக்டர் அரவிந்த்பாபு குழந்தைகள் நல மருத்துவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விருதுநகர்

