PUBLISHED ON : அக் 18, 2026

கோவை: ரீல்ஸ் பார்த்து ஆயுர்வேத மருந்துகளை எடுத்து கொண்டால், பக்கவிளைவுகளோடு உடல்நல பாதிப்பும் ஏற்படலாம் என, இ.எஸ்.ஐ., ஆயுஷ் துறை உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் பாபு தெரிவித்தார்.
* செரிமான கோளாறுகள், வயிறு உப்புசம், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு ஆயுர்வேதத்தில் தீர்வு இருக்கிறதா?
நாம் உட்கொள்ளும் உணவை பொறுத்தே, உடல் உருவாகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. உணவின் தன்மை, அளவு, சாப்பிடும் நேரம் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். உணவை உட்கொள்ளும் போது, ஐம்புலன்களும் வேலை செய்ய வேண்டும். அப்போது தான் என்ன வகையான உணவு என்ற, தகவல் மூளைக்கு செல்லும். அதை செரிக்க, தேவையான அளவு அமிலத்தை சுரக்க, மூளை வழிகாட்டும். இந்த அமிலம் உணவுடன் சீராக கலக்கும் போது, செரிமானம் நடக்கும். இதனால் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது. செரிமானம் சீராக நடந்தாலே மலச்சிக்கல் வராது.
* சர்க்கரை பாதிப்பை ஆயுர்வேத மருந்துகளால் கட்டுப்படுத்த முடியுமா?
ஆயுர்வேதத்தில், மருந்து மட்டும் கொடுப்பதில்லை. வாழ்வியல் மற்றும் உணவு முறையை மாற்றுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தானாகவே குறைய தொடங்கும். ஆனால், ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்வோர், அவற்றை உடனடியாக நிறுத்தக்கூடாது. எந்த அளவு சர்க்கரை குறைகிறதோ, அதற்கு ஏற்ப மருந்து அளவை படிப்படியாக குறைக்க வேண்டும். பின், டாக்டர் பரிந்துரைப்படி, முழுமையாக நிறுத்திவிட்டு, ஆயுர்வேத மருந்துகளை மட்டும் தொடரலாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின், ஆயுர்வேத மருந்துகளையும் படிப்படியாக நிறுத்திவிடலாம்.
* மூட்டுவலி, முழங்கால் தேய்மானம், முதுகுவலிக்கான ஆயுர்வேத சிகிச்சை என்ன?
வயது அதிகரிக்கும் போது, தேய்மான பிரச்னை ஏற்படுவது இயல்பு தான். இருப்பினும், உடலில் வாதம் அதிகரிக்கும் போது தான், தேய்மானங்கள் ஏற்படுகின்றன. இதைத்தடுக்க எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இத்துடன், எண்ணெய் ஒத்தடம் கொடுத்தல், மருந்துகள் ஆகியவை, மேலும் தேய்மானம் அடைவதை தடுத்து நிறுத்தும். எளிய உடற்பயிற்சிகளால், தசைகளை பலப்படுத்தி, வலியில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.
* தைராய்டு, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை எந்த அளவுக்குப் பயனளிக்கும்?
பெண்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ்., (PCOS), கட்டுப்படுத்த முடியாத கருப்பை ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் மற்றும் கருப்பையில் உண்டாகும் சிறிய கட்டிகள் போன்ற பிரச்னைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன. பெரும்பாலும் இப்பிரச்னைகள் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுபவை. இவை முழுமையாக குணமாக, குறைந்தது 3 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை தேவை.
* ஆயுர்வேத மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளலாமா?
ஆயுர்வேத மருந்துகளை ஒருபோதும் சுயமாக உட்கொள்ள கூடாது. எந்த நபருக்கு எந்த மருந்தை அளிக்க வேண்டும் என்பதை ஒரு மருத்துவரால் மட்டுமே சரியாக தீர்மானிக்க முடியும். மருத்துவ ஆலோசனை இல்லாமல் ரீல்ஸ் பார்த்து நேரடியாக மருந்துகளை எடுத்து கொள்ளும்போது, உடலில் ஒவ்வாமை, அரிப்பு, கொப்புளங்கள், கடுமையான பேதி அல்லது வாந்தி போன்ற பக்கவிளைவுகளும், உடல்நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
டாக்டர் பாபு
drbabu1555@gmail.com
