PUBLISHED ON : பிப் 01, 2026

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, எலும்புகள் உறுதியாக இருப்பது மிகவும் அவசியம். எலும்பின் பாதுகாப்பிற்கு நாம் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என விளக்குகிறார், கோவை அரசு மருத்துவமனை எலும்பு மூடநீக்கியல் மற்றும் விபத்து பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியன்.
எலும்பு மெலிதல் நோய் (Osteoporosis) பற்றி சொல்லுங்கள் டாக்டர்?
இந்நோய், 'அமைதியான கொலையாளி' என்று அழைக்கப்படுகிறது. இளம் வயதில் எலும்பு அரிசி போன்று இருக்கும், வயதாகும் போது பொரி போன்று அடர்த்தி குறைந்து விடும். எளிதாக உடைந்து வாழ்க்கையை முடக்கி போட்டுவிடும். இதனால்தால் இந்நோய்க்கு அமைதியான கொலையாளி எனும் பெயர்.
மூட்டு தேய்மானம் என்பது வயது முதிர்வால் மட்டுமே ஏற்படுகிறதா அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களும் காரணமா?
முதுமை என்பது முக்கியமான காரணம். இவை தவிர, விபத்துக்கள், தொற்று பாதிப்பு, எலும்பில் வரும் தொற்று போன்ற காரணங்களாலும் தேய்மானம் அதிகரிக்கிறது.
காயங்கள், விபத்துக்கள் ஏற்படும் போது, பின்பற்ற வேண்டிய முதலுதவி சிகிச்சை முறை என்றால் என்ன?
சாலை விபத்து, ஏணி மற்றும் மரங்களில் இருந்து விழும் விபத்துக்களே அதிகம். இதுபோன்ற சமயங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சுயநினைவு உள்ளதா என்று பார்க்க வேண்டும். மூச்சுவிடுகிறாரா என்பது உறுதிசெய்து கொண்டு, அவரிடம் பேச வேண்டும், கை, கால்கள் அசைகின்றதா என்றும் பார்த்து, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கீழே விழுந்தவுடன் தண்ணீர், ஜூஸ், டீ கொடுப்பது தவறு. இதனால் உடனடியாக ஆப்பரேஷன் செய்ய இயலாமல் போகும். வயிற்றில் உள்ள உணவு பொருள் ஜீரண பகுதியில் இருந்து குடல் பகுதிக்கு போன பிறகு தான், ஆப்பரேஷன் செய்ய வேண்டும். வயிற்றில் இருந்தால் புரை ஏறி உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிக உயரம் கொண்ட காலணிகளை அணிவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
பாதத்தின் முன் பகுதியும், பின்பகுதியும் சமநிலையில் தரையில் பட வேண்டும். அதிக உயரம் கொண்ட காலணிகளால் சமநிலை தவறுகிறது. தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு, இடுப்பு வலி பிற்காலத்தில் அதிகமாக ஏற்பட வாய்ப்புண்டு, அதை தவிர்ப்பது நல்லது.
வளர்ந்து வரும் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு, பெற்றோர் செய்யவேண்டியது என்ன?
முதலில் குழந்தைகளை வெயிலில் ஓடி, விளையாட அனுமதிக்க வேண்டும். அதிகம் வெயிலில் விளையாடும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி சத்து இயல்பாக கிடைத்து தசை, எலும்பு வலிமையாக இருக்கும். வீட்டுக்குள் அடைபட்டு இருக்கும் குழந்தைகளுக்கு வயதாகும் போது பல்வேறு எலும்பு சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும். தவிர, சத்தான காய்கறி, பழங்கள் உட்கொள்ள வேண்டும். யோகா முறையை சிறு வயது முதல் அனைவரும் செய்தால், மூட்டுகளுக்கு நல்ல வளையும் தன்மை கிடைக்கும்.
எலும்பு முறிவுகளுக்கு முறையாக எக்ஸ்-ரே எடுக்காமல் மாவுக்கட்டு போடுவது சரியா?
மாவுக்கட்டு என போட்டு வரும் பலர் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு கை, கால்களை இழக்கின்றனர். முறையான எக்ஸ்ரே எடுத்து அதற்கு ஏற்ற உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
- டாக்டர் வெற்றிவேல் செழியன்98430 28096svcortho@gmail.com

