PUBLISHED ON : ஜன 18, 2026

பத்து வயது சிறுவனை மருத்துவ ஆலோசனைக்கு அழைத்து வந்த போது, இரண்டு கைகள் மற்றும் கால்களில், ரத்தக் கசிவுடன் தோல் உரிந்து, பாளம் பாள மாக வெடிப்புகள் இருந்தன. கால்களை தரையில் ஊன்றவே முடியாமல் வலியில் சிறுவன் அழுதான். இது, 'சொரியாசிஸ்' நோயின் ஒரு வகையான, 'பால்மோபிளான்டர்!'
இதன் காரணமாக, சிறுவனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை; செருப்பு போட முடியவில்லை. தோல் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து வந்தனர்; ஸ்டிராய்டு மருந்து களும், வெடிப்புகளின் மீது தடவுவதற்காக களிம்புகளும் சிபாரிசு செய்திருந் தார்.
தினமும் மருந்து எடுத்தால் தான் வலி குறைந்து, வெடிப்புகள் ஆறும். ஒரு நாள் மருந்து சாப்பிடாமல்விட்டாலும், பழைய நிலைக்கு வந்து விடும்.
மேலும், 10 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் ஸ்டிராய்டு மருந்துகள் தந்தால், பக்க விளைவுகள் எப்படி இருக்குமோ என்று பயந்த பெற்றோர், மாற்று வழிமுறைகளை தேடி என்னிடம் வந்தனர்.
'ஏற்கனவே நிறைய மருந்து, மாத்திரைகளை தினமும் கொடுக்கிறோம். எங்களுக்கே அயர்ச்சியாக உள்ளது. என் பிள்ளைக்கு உள்மருந்தாக நீங்கள் எதையும் தரக்கூடாது' என்று பெற்றோர் சொல்லி விட்டனர்.
சிறுவனின் நோய் தீவிரமாக இருந்தாலும், பெற்றோரின் பயம் புரிந்த தால், முதல் வாரத்தில் வெளிப்பூச்சாக மருந்துகள் தந்தோம்.
அதன்பின், 'ஆயுர்வேத மருந்துகளில், இயற்கையான மூலிகைகளில் இருக்கும் ரசாயனங்கள் மட்டுமே உள்ளன. அலோபதி மருந்துகளுடன் சேர்த்து இதை சாப்பிடலாம். நோயின் தன்மை தீவிரமாக இருப்பதால், உள்மருந்து கொடுத்தால் விரைவாக தீர்வு கிடைக்கும்' என்று விளக்கினேன். அரை மனதாக சம்மதித்தனர்.
வயிறுக்கு உள்ள தொடர்பு
பால்மோபிளான்டர் சொரியாசிஸ் என்பது நம் நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடல் செல்களை அழிக்கும், 'ஆட்டோ இம்யூன் டிசாடர்!' உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தான் இப்பிரச்னை தீவிரமாக வெளிப்படும்.
நோய் எதிர்ப்பு செல்கள், உடலில் எந்த இடத்தில் உள்ள செல்களை அழிக்கிறதோ, அங்கு அழற்சி ஏற்படும். எந்த வகை சொரியாசிஸாக இருந்தாலும், செரிமான மண்டலம், 'மெட்டபாலிசம்' எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.
அதனால், இந்த இரண்டையும் மேம்படுத்த வேண்டும். பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை சிறுவனுக்கு இருந்தன. இவற்றை சரி செய்ய, மிதமான முறையில் நச்சுகளை வெளியேற்ற வேண்டும்.
அப்போது தான் அழற்சி சரியாகும்; பசி அதிகரிக்கும்; உடல் உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராகும்.
ஒரு வாரம் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்டதில், சிறுவனின் உடல் நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது. வழக்கத்தை விட அதிகமாக உணவு சாப்பிட்டான்.
அதன்பின், உள்மருந்துகளுடன் சேர்த்து, வெளிப்புற சிகிச்சையாக, 'சக்ரதாரா' சிகிச்சையை இரண்டாவது வாரத்தில் ஆரம்பித்தோம். மூன்றாவது நாளிலேயே வெடிப்புகள் எல்லாம் சேர ஆரம்பித்தன; வீக்கம், வலி குறைந்தது.
குளிர் காலத்தில் புதிது புதிதாக வெடிப்பு வருவதும் நின்றது.
ஏழு நாட்களில் முழுமையாக குணமானது தெரிந்தது. அடுத்த 15 நாட்கள், இரவில் மட்டும் சில ஆயுர்வேத மருந்துகளை கால், கை வெடிப்பு களில் பூசி, பருத்தி துணியால் கட்டி வைக்க சொன்னேன். அதில் உரிந்த தோல் முழுமையாக உதிர்ந்து விட்டது. அதன் பின், புதிய தோல் வளர்வதற்கான புத்துணர்வு சிகிச்சை தந்தோம்.
உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் நெய் மருந்து தந்ததில், 45 நாட்களில் கை, கால்களில் புதிய தோல் வளர்ந்து இயல்பானது.
சொரியாசிஸ் பிரச்னை உள்ளவர்கள், இரவில் பால் குடிப்பது, எண்ணெய், மசாலா, மாவு பொருட்கள், பொரித்த, வறுத்த என்று, விரைவில் செரிமானம் ஆகாத உணவுகளை தவிர்ப்பது நல்லது.
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால் தான், மருந்து முழுமையாக வேலை செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். முடிந்தவரை, புதிதாக சமைத்த உணவுகள் தான் நல்லது.
கடந்த ஜூன் மாதம், சிகிச்சை முடிந்தது. மாதம் ஒரு முறை பரிசோதனைக்கு வருகின்றனர். இதுவரையிலும் சிறுவனுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
சிகிச்சையின் முதல் நாளில் துவங்கி இன்று வரை, சிறுவனின் சிகிச்சை விபரங்களை முழுமையாக ஆவணப்படுத்தி உள்ளோம்.
டாக்டர் சுஸ்மிதா சந்திரன், ஆயுர்வேத மருத்துவர், அப்பல்லோ ஆயுர்வேத மையம், சென்னை. 95666 25848susmitha_c@ayurvaid.com

