PUBLISHED ON : நவ 16, 2025

பல் சொத்தை ஏற்படுவதற்கு பல காரணங்கள். முக்கியமாக பாக்டீரியா, உணவு, உண்ணும் நேரம், பல் பராமரிப்பு பற்றாக்குறை ஆகிய நான்கு காரணங்களால் தான் பல்சொத்தை ஏற்படுகிறது. நம்முடைய வாயில் இயற்கையாக பாக்டீரியாக்கள் இருக்கின்றன. குழந்தைகளின் உணவு பழக்கங்களில் சாக்லேட், இனிப்பு, ஜூஸ், பேக்கரி உணவுகள், மில்க்ஷேக் போன்றவை அதிகம் இடம்பெறுவதால், பல் சொத்தை மிகவும் பொதுவான பிரச்னையாகிவிட்டது.
சர்க்கரை நிறைந்த உணவுகள்,பானங்களை அடிக்கடி சாப்பிடுவதும், அவை பல் மேற்பரப்பில் நீண்ட நேரம் ஒட்டிக்கொள்வதும் பிரச்னைக்கு காரணமாகின்றன. இவை வாயில் உள்ள பாக்டீரியாவுடன் கலந்து அமிலத்தை உருவாக்கும்; அந்த அமிலம் பல் மேற்பரப்பை மெதுவாக கரைக்கும். இப்படி பல் சொத்தை வந்த பிறகு சிகிச்சை செய்வதற்குப் பதிலாக, அதை முன் கூடியே தடுப்பதே சிறந்த வழி. அதற்காக பல பாதுகாப்பு சிகிச்சைகள் உள்ளன.
பல் சொத்தையை தடுக்கவும், பற்களின் மேற்பரப்பை வலுப்படுத்தவும் மிகவும் பயனுள்ள ஒரு பாதுகாப்பு சிகிச்சை தான் ப்ளூரைடு வர்னிஷ். இது பற்களை பல் சொத்தையிலிருந்து பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு பூச்சு. இதில் உள்ள ப்ளூரைடு என்ற கனிமம் பல் மேற்புற அடுக்கான எனாமலை வலுப்படுத்தி, பல் சொத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் அமிலத்திலிருந்து பற்களை காப்பாற்றுகிறது.
இந்த வர்னிஷ் ஒரு சிறிய துாரிகை மூலம் பற்களில் மெதுவாக பூசப்படுகிறது. இது சில நிமிடங்களில் பல் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு, உமிழ்நீருடன் சேர்ந்து கடினமான ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. இதனால் பல் எனாமல் திடமாகி, ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிறிய பிரச்னை கூட தன்னிச்சையாக சரியாகி விடும்.
ப்ளூரைடு வர்னிஷ் சிகிச்சை முற்றிலும் வலி இல்லாதது, விரைவானது. சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. 6 மாதத்திற்கு ஒருமுறை செய்யலாம்.
குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பல் சொத்தை அபாயம் அதிகமுள்ள பெரியவர்களுக்கும், பல் கூச்சம் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மேம்பட்ட சிகிச்சை உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பற்களையும், நம்பிக்கையான சிரிப்பை வழங்கும். குழந்தைகளின் பல் ஆரோக்கியத்தில் நாம் செலுத்தும் சிறு கவனம், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
- டாக்டர் கே. பிரியதர்ஷினி
குழந்தைகள் நல பல் சிறப்பு மருத்துவர்
மதுரை. 83442 24184

