PUBLISHED ON : மே 31, 2026

தொண்டை வலி, உடலின் மூட்டுப்பகுதிகளில் மாறி மாறி வலிப்பது, காய்ச்சல், தோல் அலர்ஜி போன்ற அறிகுறிகள் இருந்தால், அது ருமாட்டிக் காய்ச்சலாகவும் இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.
பீட்டா ஹிமோலிடிக் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்ற பாக்டீரியாவால் வரும் இக்காய்ச்சல், மூட்டு சவ்வு, இதய வால்வு, தோல், மூளையை பாதிக்கும் அளவுக்கு அபாயகரமானது.
குறிப்பாக, இக்காய்ச்சலால் இதய வால்வுகள் சுருங்கிவிடும். ஆரம்ப நிலையிலே சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தினால், 40 வயதுக்கு மேல் இதய செயலிழப்பு ஏற்படலாம்.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இக்காய்ச்சல் பயங்கரமானது.
இதற்காகவே, தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்களுக்கு இக்காய்ச்சல் மற்றும் அதன் அறிகுறிகளுக்கு, ஆண்டுதோறும் இலவச பரிசோதனை முகாம் நடத்துகிறது.
தொற்று இருப்பது உறுதியானால் உரிய சிகிச்சைக்கு உட்படுத்தி, இறப்பு சதவீதம் குறைக்க, நடவடிக்கை எடுக்கிறது.
இதய வால்வு சுருங்கும் அபாயம்
ருமாட்டிக் காய்ச்சல், 5-15 வயது வரையிலான குழந்தைகளை குறி வைத்து தாக்குவதால், நோய் எதிர்ப்பு மண்டலமே, தன் சொந்த திசுக்களை தாக்குகிறது (autoimmune). இந்நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா பெரும்பாலும் குறுகிய இடத்தில் அதிக நபர்கள் வாழும் பகுதியிலே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதய வால்வுகள் சுருங்கும் அபாயம் உள்ளது. ரத்த பரிசோதனை, தொண்டை உமிழ்நீர் பரிசோதனை வாயிலாக கிருமி இருப்பதை உறுதி செய்யலாம். எக்கோ கார்டியோகிராம், இ.சி.ஜி. பரிசோதனை வாயிலாக இதயத்தின் பாதிப்பை அறிந்து சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவது அவசியம். தொண்டை வலிதானே என அலட்சியமாக இருக்கக்கூடாது.
- டாக்டர் நம்பிராஜன் இதயநோய் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் கோவை அரசு மருத்துவமனை
