காய்ச்சல் குறைந்ததும் டெங்கு ஆபத்து குறைந்து விட்டதா?
காய்ச்சல் குறைந்ததும் டெங்கு ஆபத்து குறைந்து விட்டதா?
PUBLISHED ON : செப் 27, 2026

பகல் நேரங்களில், அதிக அளவில் காணப்படும் ஏடிஸ் வகை பெண் கொசுக்களால், டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் காய்ச்சலில் நான்கு வகைகள் உள்ளன. டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு, மீண்டும் டெங்கு தொற்று ஏற்படலாம்; இது தீவிர பாதிப்பாகவும் இருக்கலாம்.
குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்
தொற்று பாதித்த 4 - 10 நாட்களுக்குப் பின், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, உடல், தசை, மூட்டு வலி, குமட்டல், வாந்தி, தோலில் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்; 2 வாரங்களில் குணமாகிவிடும்.
காய்ச்சல் குறைந்ததும் டெங்கு ஆபத்து குறைந்து விடுமா?
காய்ச்சல் ஏற்பட்ட 3 - 8 நாட்களில், காய்ச்சல் குறையும் சமயத்தில், தீவிர வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, மூக்கு, ஈறுகளில் ரத்தக் கசிவு, அதிக சோர்வு, அமைதி யின்மை, மூச்சிரைப்பு, குளிர்ந்த வெளிறிய தோல், சிறுநீர் குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், டெங்கு பாதிப்பு தீவிரமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக குழந்தையை உள் நோயாளியாக அனுமதித்து, சிகிச்சை பெற வேண்டும்.
சிகிச்சை
டெங்கு தொற்றுக்கென்று பிரத்யேக மருந்துகள் இல்லை; அறிகுறிகளுக்கு தான் சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, திரவ உணவுகள் அதிக அளவில் தர வேண்டும். முழுமையாக ஓய்வு மற்றும் மருத்துவரின் கண்காணிப்பு முக்கியம். காய்ச்சலுக்கு பாராசிட்டமால் பயன்படுத்தலாம். ஆஸ்பிரின் போன்ற அதிக சக்தி வாய்ந்த மருந்துகள், ரத்தக் கசிவை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கண்டிப்பாக அவற்றை தவிர்க்க வேண்டும்.
ஏடிஸ் கொசுவின் அடையாளம்
கொசுவின் உடல் மற்றும் கால்களில் வெள்ளை வரிகள் மற்றும் புள்ளிகள் காணப்படும். பூந்தொட்டி, தேங்காய் ஓடு, பழைய டயர், வாளி, குடுவை, பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றில் தேங்கும். மழை நீரில், ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.
தடுப்பு
டெங்கு கொசு கடியை தவிர்க்க, குழந்தைகளுக்கு, உடல் முழுவதும் மறைக்கும் பருத்தி ஆடைகளை அணிவிப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி கொசுத்தடுப்பு கிரீம்கள் பயன்படுத்துவது, ஜன்னல், கதவுகளில் கொசுவலை பொருத்துவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை செய்வது அவசியம்.
பகலில் துாங்கும் குழந்தைகளுக்கும், கொசுவலை பயன்படுத்துவது பயனுள்ளது. டெங்கு பாதித்த குழந்தையை கொசுக்கள் கடிக்காமல் பாதுகாப்பது, வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு பரவலைக் தடுக்க உதவும்.
டெங்கு தடுப்பூசி
உலக சுகாதார நிறுவனம் தற்போது கியூடெங்கா என்ற தடுப்பூசியை 4 - 16 வயது குழந்தைகளுக்கு, 3 மாத இடைவெளியில், 2 முறை போட பரிந்துரைக்கிறது. 60 வயது வரை அனைவரும் இதை போட்டுக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி, நம் நாட்டில் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.
பெற்றோர் கவனத்திற்கு...
'காய்ச்சல் குறைந்துவிட்டது, டெங்கு குணமாகி விட்டது' என்பது தவறான எண்ணம். காய்ச்சல் குறைந்த, அடுத்த 24 - 48 மணி நேரத்தில் குழந்தையை உன்னிப்பாக கவனிப்பது மிகவும் முக்கியம். டெங்கு வைரசின் தீவிர அறிகுறிகள், அப்போது தான் வெளிப்படும்.
டாக்டர் க.ராவணன், குழந்தைகள் நல மருத்துவர்,அரக்கோணம். 94449 55329
drkravanan@gmail.com
