PUBLISHED ON : செப் 06, 2026

'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்த காலத்தில், வாய் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய பல்வேறு அசவுகரியங்களையும், வாயில் ஏற்படும் பாதிப்புகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக பராமரிக்க இது உதவும். மாதவிடாய் நின்று போகும் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால், வாய், பிறப்புறுப்பின் உட்புறத் திசுக்களில் இருக்கும், 'ரிசெப்டார்ஸ்' எனப்படும் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளில், சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இதனால், திசுக்கள் சுருங்கி, பலவீனமாகி, இயல்பைவிட மெலிதாகலாம். இதன் காரணமாக, வாயில் தொற்றுகள் எற்படலாம்; உமிழ் நீர் சுரக்கும் அளவு இயல்பைவிட குறையலாம். இதன் காரணமாக, வாய் உலர்வது, உமிழ்நீர் குறைந்து விட்டது போன்ற உணர்வு, வாயில் பிசுபிசுப்பு, விழுங்குவதில், பேசுவதில் அசவுகரியம் ஏற்படலாம். உமிழ்நீர் சுரப்பிகள் ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுவதால், உணவின் அசல் சுவை உணரும் திறனில் மாற்றம், பல் சொத்தை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
அதேபோல், ஈறுகள் மற்றும் பற்களைத் தாங்கும் திசுக்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதால், ஈறு நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. வாயில், நாக்கில் எரிச்சல், வாயின் உட்புறத்தில் அழற்சி, தெளிவான காரணம் கண்டறிய முடியாத நரம்பியல் பாதிப்பு போன்ற பிரச்னைகள், வலியை உணர முடியாமை, வாயில் புண், அதனால் ஏற்படும் பூஞ்சைத் தொற்று வரலாம் என, சில பாதிப்புகள் ஏற்படலாம் என, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற உளவியல் காரணிகளும், சில வாய்வழி அறிகுறிகளை அதிகரிக்கக் கூடும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும், ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயமாக ஏற்படும் என்று கூறமுடியாது. இருப்பினும், தொடர்ந்து இருக்கும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், சரியான பரிசோதனை மேற்கொள்வது அவசியம். தேவைப்பட்டால், பல் மருத்துவர் சியாலோமெட்ரி எனப்படும் உமிழ்நீர் சுரப்பு அளவீட்டுப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.
மாதவிடாய் நிறுத்த காலத்தில், வாயில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியம் செய்யக்கூடாது.
டாக்டர். என். எஸ்.லீலாவதி, வாய் மற்றும் தாடை முக நோயியல் நிபுணர், தி பேஸ் டென்டல் கேர் சென்டர், சென்னை
9884790068, 9840296632
subhamfoundations@gmail.com
