போதும்டா சாமி... இனி நீ வேண்டாம் தலைதுாக்குகிறது கிரே டைவர்ஸ்
போதும்டா சாமி... இனி நீ வேண்டாம் தலைதுாக்குகிறது கிரே டைவர்ஸ்
PUBLISHED ON : நவ 23, 2025

கிரே டைவர்ஸ் என்பது, ஆண்டுகள் பல ஒன்றாக வாழ்ந்து, 50 வயதுக்கு மேல்
ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்து, தனித்து வாழவேண்டும் என்ற எண்ணத்தை
குறிப்பது.
மேற்கத்திய நாடுகளை போன்று, இது இந்தியாவில் அதிகம்
இல்லை என்றாலும், தற்போதைய சூழலில் தலைதுாக்க துவங்கியுள்ளதாக கூறுகிறார்,
உளவியல் கவுன்சிலர் சுமித்தா சாலினி.
அவர் கூறியதாவது:
கடந்த காலங்களில் சமூக, பொருளாதார சூழல்கள் காரணமாக வேறு வழியின்றி,
கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்தாலும், இறுதி வரை இணைந்து இருந்தனர்.
தற்போது, இறுதி காலத்தில் குடும்ப பொறுப்புகள் இன்றி, மீதமுள்ள வாழ்க்கையை,
தனக்காக மகிழ்ச்சியாக வாழ பலர் விரும்புகின்றனர்.
இதுபோன்ற
எண்ணத்துடன், 50 வயதை கடந்த பெண்கள் சிலர் ஆலோசனைக்கு அணுகுகின்றனர்.
அவர்களிடம் பேசினால், 'வாழ்நாள் முழுவதும் கணவன், குழந்தை, சமையல் அறை
என்று இருந்தாகிவிட்டது. குழந்தைகள் வளர்ந்து சம்பாதிக்க துவங்கி
விட்டார்கள். போதும். இனி நான் எனக்காக வாழ விரும்புகிறேன்; விவாகரத்து
பெறவேண்டும் என்று தோன்றுகிறது' என்கின்றனர்.
இது சரியா, தவறா என கேள்விகள் வருகின்றன.
இதுபோன்ற எண்ணங்கள் சரி என்றும், தவறு என்றும் யாராலும் கூற இயலாது.
அவரவர் சூழல்கள் என்னவென்று வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு புரியாது.
ஆனால், 50 வயதை கடக்கும் பெண்கள் பலர், பல ஆண்டு சமையல் அறை வாழ்வில்
இருந்து இனியாவது விடுதலை கிடைக்காதா என்று ஏங்குவது உண்மைதான்.
இதை துணைவர், பிள்ளைகள் புரிந்து கொண்டு அவர்களுடன் நேரம் செலவிடுவதுடன்,
வெளியிடங்களுக்கு கூட்டிச்செல்வது, மனம் விட்டு பேசுவது, குடும்ப முக்கிய
முடிவுகளில் அவர்களை ஈடுபடுத்தி முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றை,
கட்டாயம் பின்பற்றவேண்டும்.
முதுமையில் அவர்கள் பிரிந்து சென்று,
துணையை தேடுவதில்லை, சுயத்தை தேடவே நினைக்கின்றனர். அவர்களுக்கான நேரம்,
ஆர்வம் என்ன என்று அறிந்து, அதற்கான சூழல்களை உருவாக்கி கொடுங்கள்.
அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
தனித்து செல்ல
மனதளவிலும், பொருளாதார அளவிலும் தயாராக இருக்கவேண்டியது கட்டாயம்.
பொருளாதார சுதந்திரம் இன்றி, சுய சுதந்திரம் அவ்வளவு எளிதல்ல.
இவ்வாறு, அவர் கூறினார்.

