PUBLISHED ON : ஜூலை 05, 2026

இளைஞர்கள், பெரியவர்கள் மட்டுமல்ல, பிறந்த குழந்தைக்கும் இப்போது கண்களுக்கு தெரிவது எல்லாம் மொபைல் போன் தான். அழும் குழந்தையை சமாதனம் செய்யவும், சாப்பிட வைக்கவும் இது தானோ கிடைத்தது நமக்கு? அதை தவிருங்கள் என்கிறார் ராயல்கேர் மருத்துவமனையின் கண் மருத்துவர் நிவேதிதா.
அவர் கூறியதாவது: தொடர்ந்து மொபைல் போன் பார்க்கும் பழக்கம், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வந்து விட்டது. மொபைல் போனில் ரீல்ஸ் ஷாட்ஸ் பார்ப்பது, 'டிவி'யில் திரைப்படங்களை பார்ப்பதை விட மோசமானது. பள்ளி, கல்லுாரி செல்லும் இளம் வயதினிரிடையே பரவி வரும் மொபைல் போன்கள், கண்களை பாதிப்படைய செய்கின்றன.
இரவு, பகல் என பல நேரங்களிலும் பெற்றோர் கட்டுப்பாடுகளையும் மீறி மொபைல் போனில் பார்வையை குவித்திருப்பது கண்களை பாதிக்கும். இதனால் ஏற்படும் டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின், பார்வை திறனையும் பாதிக்கலாம்.
பிறந்த குழந்தைகள் அழுகின்றன என்பதற்காக, மொபைல்போனை கொடுத்து பழக்கக் கூடாது. வேறு விளையாட்டுகளில், செயல்பாடுகளில் ஈடுபடச் செய்வது தான் கண்களுக்கும் மூளை வளர்ச்சிக்கும் பாதுகாப்பானது.
இளம் காலை பொழுதிலும், மாலையிலும் சூரிய ஒளியில் குழந்தைகளை பார்க்க செய்வது கண்களுக்கு மட்டுமல்ல, வைட்டமின் 'டி' கிடைக்கவும் உதவும். பல நாடுகள், 18 வயது வரை மொபைல்போன் பார்ப்பதை தடை செய்துள்ளன.
சிறிய அளவில் கண் பார்வை குறைபாடு இருந்தாலும், டிஜிட்டல் திரையை பார்ப்பது, அதை மேலும் அதிகரிக்கச் செய்யும். வளர்ந்த குழந்தைகளுக்கும், 20 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போன் கொடுப்பது தவறு. பெரிய திரைகளில் பார்க்கும்போது நேரத்தின் அளவை ஒரு மணி நேரமாக அனுமதிக்கலாம்.
எப்போதுமே டிஜிட்டல் திரைகளில் பார்த்துக் கொண்டிருப்பது, கண் பார்வைக்கு நல்லது அல்ல. முடிந்த வரை தவிர்ப்பதே நல்லது. 'டிவி' திரைகளுக்கும் அமரும் இடத்துக்கும் குறைந்தது ஒரு மீட்டர் தள்ளி இருப்பது நலம். மாறு கண் என்பது அதிர்ஷடம் அல்ல; அது ஒரு குறைபாடு. நரம்பியல் பிரச்னையாக இருக்கலாம். மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற வேண்டும்.
குழந்தைகளின் கண்களுக்கு, எண்ணெய், தாய்ப்பால் விடுதல் ஆபத்தை விளைவிக்கும். மருத்துவரின் நேரடி ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் கண்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
ராயல் கேர் மருத்துவமனையில் கண் நரம்பியல் தொடர்பான பரிசோதனைகளுக்கும், கண் செயல் திறன்களை அறியவும் பல்வேறு நவீன கருவிகள் உள்ளன. அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு 0422 2227106 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
