PUBLISHED ON : ஜன 04, 2026

பனிப்பொழிவு அதிகமாக உள்ள சமயங்களில், முகவாதம் ஏற்படும் என்பது, நம்மில் பலர் அறியாத ஒன்று. இது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இதன் அறிகுறிகளை எளிதாக கண்டறியலாம் என்கிறார், நரம்பியல் பிசியோதெரபிஸ்ட் அம்சவள்ளி.
முகவாதம் என்பது என்ன?
முகவாதம் என்பது, முகத்தின் அசைவுகளுக்கு காரணமான முகத்தின் நரம்பு, தற்காலிகமாக செயல் இழப்பதால் ஏற்படும் நிலை. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பனி அதிகம் இருக்கும் என்பதால், இச்சமயங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?
அதிகாலையில் வெளியிடங்களுக்கு செல்பவர்கள், அதிகாலை நடைபயிற்சி, நீண்ட வாகன பயணம் செய்பவர்கள் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர். அதிக பனி காற்று காது வழியாக புகும்போது, முக அசைவுகளுக்கு உதவும் நரம்பில் நீர் கோர்த்து, அந்த நரம்பு செல்லும் சிறிய துவாரத்தை அழுத்துகிறது. இதனால் முக தசைகள் செயலிழந்து முகவாதம் ஏற்படுகிறது.
இப்பாதிப்பு ஏற்படுவதை ஆரம்பத்தில் எப்படி அறிவது?
பேசும் போதும், சிரிக்கும் போதும் வாய் ஒரு பக்கமாக இழுப்பது, பாதிக்கப்பட்ட கண்கள் முழுமையாக மூட முடியாத நிலை, ஒரு கண்ணில் அதிக கண்ணீர் சொட்டுவது, சுவை இழப்பு, சாப்பிடும் போது கன்னத்தின் உட்பகுதி பற்களுக்கிடையே சிக்குவது, தண்ணீர் குடிக்கும் போது ஒரு பக்கமாக சிந்துவது போன்றவை முக்கிய அறிகுறிகள். ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றால், எளிதாக குணப்படுத்த முடியும்.
முகவாதம் வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பனி அதிகம் உள்ள நேரத்தில் நடைபயிற்சி, இருசக்கர வாகன பயணம், ஜன்னலோர பேருந்து மற்றும் ரயில் பயணம், ஏ.சி., அருகில் நீண்ட நேர பணி, தரையில் படுத்து உறங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காதுவலி, அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் முன், காதில் பஞ்சு வைக்க வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும். குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்ப்பது நல்லது.
பிசியோதெரபி எப்படி உதவுகிறது?
பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் செயலிழந்த முக தசைகளை மின்துாண்டல் முறையில் வலுப்படுத்தி, முக அமைப்பை இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டு வர முடியும். முகவாதம் ஏற்பட்ட சுவடே தெரியாமல் குணமாக்க இயலும். ஆரம்ப நிலையில் அலட்சியம் இன்றி டாக்டர்களை சந்திக்க வேண்டும்.
--அம்சவள்ளி
நரம்பியல் பிசியோதெரபிஸ்ட்
96262 80496
friendsphysio.vp@gmail.com

