PUBLISHED ON : ஜூன் 21, 2026

ரத்த குளுக்கோஸ் அளவை அடிப்படையாகக் கொண்டு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது வழக்கம். இதற்காக மூன்று மாத சராசரி ரத்த சர்க்கரை அளவை கண்டறியும் ஹெச்.பி.ஏ.1சி., உணவு சாப்பிடுவதற்கு முந்தைய குளுக்கோஸ் அளவு, சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின், ரத்த சர்க்கரை அளவைக் கணக்கிடுவது தான் வழக்கத்தில் இருக்கும் பொதுவான நடைமுறை.
இது சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்ய உதவுகிறதே தவிர, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை கண்டறிய முடிவதில்லை.
என்ன காரணம்?
மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை பரிசோதிக்கும் போது, சர்க்கரை நோய் இருப்பதற்கான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிந்தாலும், ஹெச்.பி.ஏ.1சி., பரிசோதனையில் பெரும்பாலும், ரத்த சர்க்கரை அளவு இயல்பாக உள்ளது; சிலருக்கு, இயல்பை விட சிறிய மாற்றம் மட்டுமே தெரிகிறது.
இது, வழக்கமான பரிசோதனைகளுக்கு மாற்றாக, சர்க்கரை நோய்க்கான மூலக் காரணத்தை கண்டறிய வேண்டிய தன் அவசியத்தை உணர்த்தியது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது, சர்க்கரை நோய்க்கான பிரதான காரணம் கொழுப்பு என்று தெரிய வந்தது.
கொழுப்பு
உடல் உள்ளுறுப்புகள், கல்லீரலைச் சுற்றி சேரும் அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் ஹார்மோன் செயல்பாட்டைக் குறைப்பதில் பிரதான பங்கு வகிப்பது ஆய்வுகளில் உறுதியானது.
குறிப்பாக, உடல் உள் உறுப்புகளை சுற்றி சேரும் கொழுப்பு, வளர்சிதை மாற்றத்தில் விரைவாக செயல்பட்டு, வளர்சிதை மாற்றம் சீராக நடப்பற்கு காரணமான சைட்டோகைன்ஸ், அடிப்போகைன்ஸ் போன்ற புரதங்களில் அழற்சியை ஏற்படுத்துகிறது. இது, திசுக்களில் நடக்கும் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது.
குறிப்பாக, கல்லீரலை சுற்றி சேரும் கொழுப்பு, குளுக்கோஸ் செயல்பாட்டை நேரடியாக சீர்குலைக்கிறது. இதனால், சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
ஹோமா- - ஐஆர்
ஹெச்.பி.ஏ.1சி., பரிசோதனையில் சர்க்கரை நோய் இருப்பது தெரிவதற்கு முன், வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை, நவீன உயிரி வேதியியல் குறிப்பான்கள் மூலம் செய்யப்படும் ஹோமா - -ஐஆர் என்ற பரிசோதனையில் கண்டறியலாம்.
இதனால், சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற முடியும்.
தனி நபரின் வளர்சிதை மாறுதல்களுக்கு ஏற்ப வ ழி காட்டுவதும் சுலபம்.
இது தவிர, உயிர்-மின் தடை பகுப்பாய்வு - 'பிஐஏ' என்ற நவீன முறையை பயன்படுத்தி, இரண்டு,- மூன்று நிமிடங்களில் உள்ளுறுப்பில் படிந்துள்ள கொழுப்பு, மொத்த உடல் கொழுப்பு சதவீதம், எலும்புத் தசையின் திறன், உடலின் நீர்ச்சத்து அளவை தெரிந்து கொள்ள முடியும்.
மொத்தத்தில், ரத்த சர்க்கரை அதிகரிப்பதற்கான காரணத்தை முன்கூட்டியே தெரிந்து, செயல்படும் போது, ரத்த சர்க்கரை நோயாக மாறாமல் தடுக்க முடிகிறது.
வருமுன் காக்க.,
'ரெடினா' எனப்படும் கண் விழித்திரையை ஸ்கேன் செய்து, ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிவது, உள்ளுறுப்பு மற்றும் கல்லீரல் கொழுப்பை குறைப்பது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவது.
அழற்சி மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை சரி செய்வது, தசை திறன், வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிப்பது, அவரவரின் தேவைக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகள், உடற்பயிற்சி செய்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கலோரிகளை எரித்து, இன்சுலின் செயல்திறனை தசைகளில் மேம்படுத்த வேண்டும்.
டாக்டர் அருண் ராகவன், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற மருத்துவ ஆலோசகர், ரிவைவோ கிளினிக் பார் ஒபீசிட்டி அண்டு டயாபடீஸ், சென்னை 75500 11866arun34@yahoo.com
