பேஃட்டி லிவர் பாதிப்பு வாழ்வியல் முறைகளால் விரட்டி விடலாம்
பேஃட்டி லிவர் பாதிப்பு வாழ்வியல் முறைகளால் விரட்டி விடலாம்
PUBLISHED ON : அக் 04, 2026

தவறான வாழ்வியல் முறைகளால், இளைஞர்கள் அதிகளவில் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என, மூத்த இரைப்பை, குடல், கல்லீரல் நோய் நிபுணர் டாக்டர் எஸ்.ராஜா தெரிவித்தார்.
* ஒல்லியாக இருப்பவர்களுக்கும் 'பேஃட்டி லிவர்' பாதிப்பு வருமா?
உயரத்திற்கு ஏற்ற எடையை குறிப்பிடும், 'பாடி மாஸ் இன்டெக்ஸின்' சராசரி அளவீடு 18- 25. ஆனால், இது குறைவாக இருப்பவர்களுக்கும், பேஃட்டி லிவர் பாதிப்பு வருகிறது. இதற்கு மரபணு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
உள்ளுறுப்புகளில் அதிக கொழுப்பு படிந்திருந்தாலும், இப்பாதிப்பு வரலாம். அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் பருமன், கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உள்ளவர்களுக்கும் பேஃட்டி லிவர் பாதிப்பு வரலாம்.
* கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை முன்கூட்டியே வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னென்ன?
தொடர்ச்சியான சோர்வு, வாந்தி வருவது போன்ற உணர்வு, உடல் எடை குறைவது, சிறுநீர் மற்றும் கண்ணின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக மாறுவது, தூக்கமின்மை, சிறிது அடிபட்டாலும் அதிக ரத்தம் வெளியேறுவது, அதிக ரத்தப்போக்குடன் ஒழுங்கற்ற மாதவிடாய், குழப்பம் மற்றும் திடீரென மயக்க நிலைக்குச் செல்வது ஆகியவை அறிகுறிகள். உடனே மருத்துவரை அணுகி பரிசோதிப்பது அவசியம்.
* பேஃட்டி லிவரை மாத்திரைகள் இல்லாமல் வாழ்வியல் முறைகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியுமா?
கண்டிப்பாக. முழு தானியங்களை உணவில் சேர்ப்பது, அதிக காய்கறி, விட்டமின் நிறைந்த, கொழுப்பு குறைந்த உணவு சாப்பிடுவது அவசியம். நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்ப்பது, மது, புகைப்பழக்கத்தை கைவிடுவது, அதிக உடல் எடை இருந்தால் குறைப்பது போன்றவற்றின் மூலமாக, 70-80 சதவீத பேஃட்டி லிவர் குறைந்துவிடும். இத்துடன், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு போன்றவற்றையும் கட்டுக்குள் கொண்டுவந்தால், முழுமையாக குணப்படுத்த முடியும்.
* கிரேடு 1,2,3 ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் பற்றி?
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் கல்லீரலின் நிலையை பொறுத்தே, கிரேடு 1,2,3 என வகைப்படுத்தப்படும். இதில், முதல் நிலையில் இருந்தால், சிறிதளவு கொழுப்பு படிந்து, சற்று மங்கிய நிறந்தில் கல்லீரல் தெரியும்.
இரண்டாவது நிலை, ஸ்டியட்டோசிஸ் (Steatosis) எனப்படும். கல்லீரலின் மேல் பகுதி கொழுப்பு படிந்திருக்கும் நிலை. மூன்றாவது நிலை தீவிரமானது. இதில், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும். கல்லீரல் சுருக்கம் ஏற்படும்.
* கல்லீரல் சுருக்கம் அல்லது சிரோசிஸ் என்றால் என்ன?
சிரோசிஸ் என்பது நம்முடைய கல்லீரல் முழுமையாக, பல காரணங்களால் பாதிக்கப்பட்டு, சுருங்கும் நிலையை அடையும். வழவழப்பாக இருக்கும் கல்லீரலில் சிறிய கட்டிகள் இருப்பது போல காணப்படும். ஆரம்ப நிலையாக இருந்தால், மருந்து, உணவுமுறை, உடற்பயிற்சியால் பழைய நிலைக்கு மாற்ற முடியும். தீவிர நிலைக்கு சென்றால், கல்லீரலை மாற்றுவது தான் ஒரே வழிமுறை.
* எந்த கட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது?
கல்லீரல் செயல்திறன், சீரம் பிலிரூபின், சீரம் கிரியேட்டினின், சீரம் சோடியம், சீரம் ஆல்புமின் போன்ற சில பரிசோதனைகள் மூலம் அளவிடப்படும். அதில் பிரத்யேக 'ஸ்கோர்' (MELD - Model for End-Stage Liver Disease) உள்ளது.
இது, 16-க்கும் மேல் இருக்கும் போது கல்லீரல் முழுமையாக செயலிழந்து விட்டது என்பதாகும். இந்நிலையில் நோயாளி உயிர்பிழைக்க வாய்ப்பு குறைவு என்பதால், கட்டாயம் மாற்று அறுவை சிகிச்சை அவசியம்.
* குடும்பத்தில் ஒருவருக்கு கல்லீரல் வைரஸ் தொற்று இருந்தால் மற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன?
'ஹெபடைடிஸ் ஏ' வைரஸ், உணவு, தண்ணீர் மூலமாக பரவக்கூடியது. சுத்தமாக கழிவறைகளை பராமரிப்பது, சோப்பு போட்டு கை கழுவுவது, காய்ச்சிய தண்ணீர் குடிப்பது, வீட்டிலேயே சமைத்த உணவு சாப்பிடுவதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
'ஹெபடைடிஸ் பி' வைரஸ் பிறருக்கு பரவக்கூடியது. எனவே, குடும்ப உறுப்பினர்கள் 'எச்.பி.எஸ்.ஏ.ஜி' (HBsAg) என்ற பரிசோதனை செய்து, அது நெகட்டிவாக இருந்தால், தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம். அரசு மருத்துவமனைகளிலும், இத்தடுப்பூசி உள்ளது. இதில், மூன்று டோஸ் போட்டால், நிரந்தரமாக, 'ஹெபடைடிஸ் பி' வைரஸிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
'ஹெபடைடிஸ் சி' வைரஸால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை, மற்றவர்களுக்கு செலுத்தினால் மட்டுமே பரவும்.
* நாட்டு மருந்துகள் அல்லது சுயமாக வலி நிவாரணிகள் எடுப்பது கல்லீரலை செயலிழக்க செய்யுமா?
எல்லா மருந்துகளும், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளும் கல்லீரலில் இருந்து சுரக்கும் சுரப்பிகளாலும், வேதிப்பொருட்களாலும்தான் ஜீரணமாகிறது. மெட்டபாலிசம் நடக்கிறது. மஞ்சள் காமாலை வந்தாலே பச்சிலை சாப்பிடுவது, நாட்டு மருந்து சாப்பிடுவது, கண்டிப்பாக கல்லீரலை பாதிக்கத்தான் செய்யும். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இதேபோல வலி மாத்திரைகள், கல்லீரல், சிறுநீரகம், வயிற்றை பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
-drsraja87@gmail.com
