சாப்பிட்டதும் வயிற்றில் கனமான உணர்வு ஏற்படுவது ஏன்?
சாப்பிட்டதும் வயிற்றில் கனமான உணர்வு ஏற்படுவது ஏன்?
PUBLISHED ON : ஆக 30, 2026

தொடர்ந்து மது அருந்துபவர்கள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு மட்டுமே 'பேட்டி லிவர்' என்னும் கல்லீரலில் கொழுப்பு சேரும் நோய் வரும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், மதுப்பழக்கமே இல்லாத பலருக்கும் இந்த பாதிப்பு இருப்பதை, மருத்துவர்கள் தற்போது அதிகம் கண்டறிந்து வருகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டியது, இவர்களில் பலர் ஒல்லியாகவும், பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாகவும் இருப்பவர்கள். சரியான உடல் எடையுடன் இருந்தாலும், உடலின் வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் இருந்தால், கல்லீரலில் கொழுப்பு சேருகிறது.
உலகம் முழுதும் தற்போது மிகவும் பொதுவாக காணப்படும் நாள்பட்ட கல்லீரல் நோயாக 'பேட்டி லிவர்' உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களில், 50 -- 70 சதவீதம் பேருக்கு பேட்டி லிவர் பாதிப்பு இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பார்ப்பதற்கு ஒருவர் ஒல்லியாக இருந்தாலும், அவரது கல்லீரல், கணையம் மற்றும் குடல் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு சேர்ந்திருக்கலாம். 'உள்ளு றுப்பு கொழுப்பு' எனப்படும் இந்த மறைந்திருக்கும் கொழுப்பு; தோலுக்கு அடியில் சேரும் கொழுப்பை விட மிகவும் ஆபத்தானது.
இன்றைய நவீன வாழ்க்கை முறை இப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியர்களுக்கு ஆபத்து அதிகம் இருப்பது ஏன்? மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, தெற்காசியர்களுக்கு குறைவான உடல் எடையிலேயே இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும் தன்மை உள்ளது. இந்த இன்சுலின் எதிர்ப்பு, கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு காரணமாகிறது.
இதனால் இந்தியர்கள் அதிக உடல் எடையுடன் இல்லாவிட்டாலும், வளர்சிதை மாற்ற குறைபாடுகளால் வரும் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆரம்ப கால அறிகுறிகள் தொடர்ந்து சோர்வாக இருப்பது, சாப்பிட்ட உடனே வயிறு கனமான உணர்வு, அடிக்கடி வயிறு உப்புசம், வயிற்றில் அசவுகரியம் போன்றவை.
இந்த அறிகுறிகள் பெரும்பாலும் லேசானதாகவும், குறிப்பிட்ட நோயை குறிக்காத வகையிலும் இருப்பதால், இவற்றை நாம் எளிதில் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
இந்த பாதிப்பை கண்டறியாமல் விட்டால், இது படிப்படியாக கல்லீரல் சுருக்கம், கல்லீரல் செயலிழப்பு மற்றும் சில சமயங்களில் கல்லீரல் புற்று நோயாகக் கூட மாறலாம்.
சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், தொப்பை உள்ளவர்கள், துாக்கத்தில் மூச்சுத்திணறல், நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய், கல்லீரல் நோய் இருப்பவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் சர்க்கரை சேர்க்காத காபி தினமும் 3 கப் குடிப்பது நல்ல பலன் தரும்.
பதப்படு த்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மைதா போன்ற மாவுச் சத்து உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி,
வாரத்திற்கு இரண்டு முறையாவது தசை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
தினமும் இரவில் 7 -- 8 மணி நேரம் நன்றாக துாங்க வேண்டும்.
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
டாக்டர் கவுதம் குமார்
ஏ.பி., ஆலோசகர், பொது மருத்துவம், டாக்டர் மேத்தா மருத்துவமனை. சென்னை 98400 81326 appointments@mehtahospitals.com
