காதில் இருந்து திரவம் வந்தால் மூளைக்கு ஆபத்து வரலாம்
காதில் இருந்து திரவம் வந்தால் மூளைக்கு ஆபத்து வரலாம்
PUBLISHED ON : ஜூன் 07, 2026

பிறவி குறைப்பாடுகளை தவிர, காதில் சீழ் வடிதலே காது கேளாமைக்கு முக்கிய காரணம் என்கிறார், கோவை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர் நல்லசிவம்.
காது சவ்வு பாதிப்பு யாருக்கு ஏற்படும்?
நீண்டநாட்கள் அல்லது அடிக்கடி சளி தொந்தரவு இருப்பவர்கள், காதில் தொற்று இருத்தல், அன்னப்பிளவு, தாடை பிளவு பாதிப்பு இருப்பவர்கள், விபத்து மற்றும் காது சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் பயன்படுத்துவோருக்கு காது சவ்வில் ஓட்டை ஏற்படலாம்.
காதில் சீழ் போன்ற திரவம் வெளியேறுதல், கேட்கும் திறன் குறைதல் போன்ற அறிகுறிகளால் சவ்வு பாதிக்கபட்டிருப்பதை அறியலாம். இப்படி சீழ் வருவதை அலட்சியப்படுத்தினால், அங்கு இறந்த தோல் திசுக்களால் ஆன ஒரு கட்டி உருவாகும்.
இது புற்றுநோய் கட்டி அல்ல. ஆனால், அதை சுற்றியுள்ள எலும்புகளை வேகமாக அரித்து அழித்துவிடும். முகத்திற்கு வரும் நரம்புகள் பாதிக்கப்பட்டு முக பக்கவாதம் ஏற்படலாம். உள்காது சவ்வு பாதிக்கப்பட்டால், மூளையில் தொற்று ஏற்படலாம்.
மூளை பாதிப்பை அறிவது எப்படி?
காதை முன், நடு, உள் பகுதி என மூன்றாக பிரிக்கலாம். முன்பகுதி பாதிக்கப்பட்டாலும் சீழ் வெளியேறலாம். ஆரம்ப நிலையிலே சிகிச்சை அளித்தால் குணமாகும். நடுக்காது பகுதி 0.6 மி.மீ., அளவே. இப்பகுதி பாதித்தால், உள்காது வழியாக எளிதில் மூளையில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். தொடர் காய்ச்சல், தலைசுற்றல், காதில் சீழ் வடிதல் இதன் அறிகுறி. உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.
இதற்கான சிகிச்சை முறை என்ன?
எண்டோஸ்கோப்பி மூலம் சிறிய கேமரா பொருத்தி பாதிப்பு அறியப்படும். கேட்கும் திறன் பரிசோதனை, சி.டி., ஸ்கேன் மூலம் காது எலும்புகள் பாதிப்பு, மூளையில் தொற்று இருக்கிறதா என உறுதி செய்யப்படும். அறுவை சிகிச்சை மூலம் மூளையின் தொற்று கிருமிகள் அகற்றப்பட்டு, காது சவ்வு சரி செய்யப்படும்.
எலும்பு முழுமையாக அரிக்கப்பட்டிருந்தால் கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும். பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால், காது மடல் தண்டு எடுத்து அப்பகுதியில் பொருத்தப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, காது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இழந்த கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியாது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதாவது?
தலை குளிக்கும் போது காதில் பஞ்சு வைத்துக் கொள்வது, குழந்தைகள் காதில் ஏதேனும் பொருட்களை விட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து வருவது, பட்ஸ், ஊக்கு, குச்சி போன்றவற்றை காதுக்குள் விடாமல் இருப்பது அவசியம். இத்துடன் காது சார்ந்த எந்த பிரச்னைக்கும் சுய வைத்தியம் கூடாது. மூளையை பாதிக்கும் அளவுக்கு அபாயத்தில் முடியலாம்.
- டாக்டர் நல்லசிவம்காது, மூக்கு, தொண்டை பிரிவு,
அரசு மருத்துவமனை.
nalls.dr@gamil.com
