குழந்தைகளை எவ்வளவு நேரம் மொபைல் போன் பார்க்க அனுமதிக்கலாம்?
குழந்தைகளை எவ்வளவு நேரம் மொபைல் போன் பார்க்க அனுமதிக்கலாம்?
PUBLISHED ON : ஆக 09, 2026

நாம் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் நேரம் இரு வகைப்படும். ஒன்று, படிப்பது, புதிய விஷயங்களை கற்பது, பாடங்கள் தொடர்பான விஷயங்களை பார்ப்பது போன்ற, 'ஆக்டிவ் ஸ்குரோலிங்!'
அடுத்தது, வெறுமனே நேரத்தைப் போக்குவதற்காக மொபைல் போனில் வீடியோக்கள், 'ரீல்ஸ்' பார்ப்பது என்ற, 'பேசிவ் ஸ்குரோலிங்!'
'பிரி பிரண்டல் கார்ட்டெக் ஸ்' எனப்படும் மூளையின் முன் பகுதி, சிந்திக்கும் திறன், நினைவில் பதிய வைப்பது, உணர்வுகளின் மையப் பகுதியாக செயல்படுவது போன்ற வேலைகளைச் செய்கிறது. பேசிவ் ஸ்குரோலிங் அதிக அளவில் செய்யும் போது, மூளை செல்களை வளர விடாமல் செய்து விடுகிறது.
அதிக நேரம் மொபைல் பார்க்கும் குழந்தைகளின் மூளையை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்யும் போது, வளர்ச்சி குறைபாடுகள் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். நீண்ட நேரம் ஸ்கிரீன் பார்ப்பதால் ஏற்படும் மறதி, குழப்பங்களுக்கு, 'டிஜிட்டல் டிமென்ஷியா' என்று பெயர்.
துாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மொபைல் போன் பார்க்க, குழந்தைகளை அனுமதிக்கவே கூடாது. மொபைல் போனிலிருந்து வரும் ஊதா வெளிச்சம் துாக்கம் வருவதற்குத் தேவையான மெலோடோனின் உற்பத்தியை குறைத்து, துாக்கம் வருவதைத் தடுத்து விடும். போதுமான நேரம் துாங்காவிட்டால், மூளை வளர்ச்சி குறைந்து, முழு திறனுடன் குழந்தைகளால் செயல்பட முடியாது. விளையாட்டு, படிப்பு, நினைவாற்றல் என்று அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். ஒரு இடத்தில் அமர்ந்து கவனத்துடன் எந்த வேலையும் செய்ய முடியாது.
30 வினாடிகளுக்கு ஒரு ரீல்ஸ் என்று தொடர்ந்து பார்ப்பதால், டோபமைன் ஹார்மோன், 'பளிச் பளிச்' என்ற விளக்கு அணைந்து எரிவதைப் போன்று சுரக்கும். சில வினாடிகளுக்கு ஒரு முறை, புதிது புதிதாக பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கே மூளை பழகி விடும்.
நாளடைவில், அரைமணி நேரம் கூட தொடர்ச்சியாக பள்ளி வகுப்பை கவனிக்க குழந்தைகளால் முடியாமல் போகும்; எரிச்சல் அடைவர்.
குழந்தையின் சிந்தனைத் திறனை மொபைல் போன் வெகுவாகக் குறைத்து விடுகிறது. குழந்தையை வெளியில் அழைத்துச் சென்று, பறவைகள், மனிதர்கள், மரம், செடி, கொடி, வானம் என்று காட்டும் போது, புலன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்து, பார்க்கும் அனைத்தையும் கற்றுக் கொள்ளும்.
அதே நேரத்தில், மொபைல் போனை கையில் கொடுத்தால், வெறுமனே அதைப் பார்க்குமே தவிர, எதையும் மூளையில் பதிய வைக்காது. கற்றுக் கொள்ளாது.
மொபைல் போன் நேரம் பிறந்தது முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள், மொபைல் போனை பர்க்கவே கூடாது. மூன்று - முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகள், அதிகபட்சம் ஒரு மணி நேரம் மொபைல் போன் பார்க்க அனுமதிக்கலாம். ஏழு - முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள்,, அதிகபட்சம், ஆன்-லைன் வகுப்புகளையும் சேர்த்து, நான்கு மணி நேரம் பார்க்கலாம். 14 வயதுக்கு மேல், பெற்றோரின் கண்காணிப்புடன், அதிகபட்சம் ஐந்து மணி நேரம், 'ஸ் கிரீன் டைம்' இருக்க வேண்டும்.
டாக்டர் எஸ்.கார்த்திகேயன், நரம்பியல் நிபுணர், எம்ஜிஎம் மலர் மருத்துவமனை, சென்னை 95970 46133
drkarthikneuro@gmail.com
