தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தோழி... டெஸ்ட் எடு, ஆரோக்கியத்தை கொண்டாடு!

தோழி... டெஸ்ட் எடு, ஆரோக்கியத்தை கொண்டாடு!

தோழி... டெஸ்ட் எடு, ஆரோக்கியத்தை கொண்டாடு!


PUBLISHED ON : ஆக 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் ஒரு குடும்பத் தலைவி; அதே சமயம் என்னுடைய குடும்பத் தொழிலையும் கவனித்து வருகிறேன். இயல்பாக ஆரோக்கியமான பெண்மணி தான். 45 வயதிற்கு மேல், மார்பக, கர்ப்பப்பை வாய் கேன்சர் உட்பட சில பரிசோதனைகளை, டாக்டரின் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும் எனக்கு இருந்ததால், அதையும் தவறாமல் செய்து வந்தேன்.

கடந்த 2009ம் ஆண்டு, ஒரு நாள் வழக்கம் போல உடற் பயிற்சிகளை எல்லாம் முடித்து விட்டு, சுய பரிசோதனை செய்த போது, என் மார்பகத்தில் ஏதோ வேறுபாடு இருப்பதை உணர்ந்தேன். தாமதிக்காமல் உடனடியாக டாக்டரிடம் சென்று, பரிசோதனைகளை செய்த போது, எனக்கு மார்பக கேன்சர் பாதிப்பு உறுதியானது.

டாக்டர் செல்வி ராதாகிருஷ் ணாவிடம் சென்றேன். அவரின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரும் தேவையான பரிசோதனைகளை செய்த பின், உடனடியாக சிகிச்சையை தொடங்க வேண்டும் என்றார். நான் தொடர்ந்து அவரிடம் சிகிச்சைக்காக சென்ற போது, அங்கு வரும் நோயாளிகளை கவனிப்பேன். பலருக்கு நோய் பற்றிய புரிதல் இருக்காது; சிலர் குழந்தைகளின் படிப்பு, குடும்பப் பொறுப்பு என்று கவனித்து உடல் மாற்றத்தை, யாரிடமும் சொல்லாமல் இருப்பர்; சிலர் பொருளாதார வசதி இல்லாமல் சிகிச்சை செய்ய சிரமப்படுவர். கேன்சராக இருந்தால் என்ன செய்வது? குழந்தைகள் சிறியவர்களாக இருக்கின்றனர். கொஞ்ச நாள் கழித்துப் பார்க்கலாம் என்று தள்ளிப் போடுபவர்களும் உண்டு. இப்படி பல காரணங்களால், பெரும்பாலானவர்கள், சிகிச்சைக்கு தாமதமாகவே வருகின்றனர்.

இதையெல்லாம் பார்த்த போது, நாம் ஏன் ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பித்து, கேன்சர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது என்று தோன்றியது.

டாக்டர் செல்வி ராதா கிருஷ்ணா, இணை நிறுவனராக இருக்க சம்மதித்தார். என் நண்பர்கள் உதவியோடு, கேன்சர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தயாரித்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று கொடுத்தோம்.

அடுத்து, மார்பக சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் துவங்கி, கேன்சர் குறித்த பல்வேறு அம்சங்களையும் எளிமையாக புரியும் வகையில், இயக்குநர் பிரியா வி. அனுஹாசன், பத்திரிகையாளர் கீதா மோகன் உதவியுடன் மூன்று ஆவணப்படங்களை தயாரித்தோம்.

பல கல்லுாரிகளில், குறிப்பாக, பொருளாதார நிலையில் பின் தங்கிய முதல் தலைமுறை பட்டதாரி மாணவியரை தேர்வு செய்து, இந்த ஆவணப்படங்களை போட்டு காண்பித்தோம். காரணம், இவர்களின் தாயார் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்து, சொற்ப வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருப்பர். இவர்களுக்கு, மார்பகத்தில் கட்டி, அளவில் வேறுபாடு தெரிந்தால் என்ன செய்ய வேண்டும், கர்ப்பப்பை வாய் கேன்சர் ஏன் வருகிறது, எப்படி தடுப்பது என்று எதுவும் தெரியாது. நான்கைந்து ஆண்டுகள் இது போன்ற விழிப்புணர்வை எற்படுத்தி வந்தோம்.

இது மட்டுமே போதாது என்று தோன்றியதால், அசோக் லேலண்டு நிறுவனத்திடம் பேசி, வழக்கமான பேருந்து போன்று இல்லாமல், பறவைகள், வண்ணத்துப்பூச்சி, பூக்கள் என்று வண்ண மயமாக ஒரு பேருந்தை பிரத்யேகமாக தயாரித்து, அதில் மேமோகிராம், பேப்ஸ்மியர் கருவிகளை பொருத்தி, 'தோழி டெஸ்ட் எடு, ஆரோக்கியத்தைக் கொண்டாடு' என்ற வாசகங்கள் எழுதினோம். பேருந்து செல்லும் இடங்களில் எல்லாம், ஏதோ சினிமா படப்பிடிப்பு என்று மக்கள் ஆர்வமாக வந்தனர். அவர்களிடம், 'நீங்கள் ஆரோக்கியமாகவே இருக்கிறீர்கள்; அதை இன்னும் கொஞ்சம் உறுதிபடுத்திக் கொள்ளலாம்' என்று சொல்வோம்; நல்ல பலன் கிடைத்தது. இது வரையிலும், 3 லட்சம் பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம்.

இது போன்ற இன்னொரு பேருந்தை ரோட்டரி கிளப் எங்களுக்கு வழங்கியுள்ளது.

கேன்சர் என்று உறுதியான நோயாளிகளுக்கு, அவரவரின் பொருளாதார நிலைக்கு ஏற்ப, எங்கு செல்லலாம் என்பதில் ஆரம்பித்து, கேன்சரில் இருந்து முழுமையாக வெளிவரும் வரை தேவையான அனைத்து வழி காட்டுதல்களையும் தருகிறோம்.

அடுத்த கட்டமாக, நவீன தொழில்நுட்ப வசதி, குறைந்த கட்டணத்தில் சிகிச்சை தர வேண்டும் என்பதற்காக, '3டி ஸ்கேன்' உட்பட அனைத்து வசதிகளையும், கண்ணப்பா நினைவு மருத்துவமனையில் ஏற்படுத்தி உள்ளோம்.

ராதிகா சந்தான கிருஷ்ணன், நிறுவனர், 'பெண் நலம்' அமைப்பு, சென்னை 98404 16775, 98849 17484

info@pennalam.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us