PUBLISHED ON : அக் 11, 2026

‘பை ப்ராய்டுகள், எண்டோமெட்ரியோ சிஸ், அடினோமயோசிஸ்’ போன்ற கருப்பை தொடர்பான பிரச்னைகளால், 30- – 40 வயதுடைய பெண் களுக்கு, ‘ஹிஸ்ட்ரெக்டமி’ எனப்படும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்வது பொதுவான நடைமுறை.
அறுவை சிகிச்சைக்கு பின், சில வாரங்கள் வயிறு, இடுப்பு பகுதியில் லேசான வலி, வயிறு உப்புசம், சோர்வு, லேசான ரத்தப்போக்கு உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்படலாம். வெளிப்புறத்தில் காயம் ஆறியது போல் தோன்றினாலும், உடலுக்குள் குணமடைய சிறிது காலம் ஆகலாம்.
எனவே, முழுமையாக நலம் பெற்று விட்டதாக டாக்டர் சொல்லும் வரை, கனமான பொருட்களை துாக்குவது, உடலை வருத்தி வேலை செய்வது, தாம்பத்திய உறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். நல்ல ஓய்வு, தேவையான புரதம், நார்ச்சத்து அடங்கிய சத்தான உணவு, நீர்ச்சத்து குறையாமல் இருப்பது, விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும்.
கருப்பையை நீக்கம் செய்து கொள்ளும் பெண்களுக்கு, ரத்த இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இரும்பு சத்து அளவை சரிபார்க்க வேண்டியதும் அவசியம்.
சில சமயங்களில், கருப்பையை நீக்குவதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், குறிப்பிட்ட வயதிற்கு முன்பே, மாதவிடாய் நிறுத்தத்திற்கு வழி செய்யும். குறிப்பாக 30 –- 40 வயதுடைய பெண்ணுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யும் போது, திடீர் உடல் வெப்பம், இரவு நேர வியர்வை, துாக்க மின்மை, மனநிலையில் மாற்றங்கள் போன்ற மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள் ஏற்படலாம்.
இந்த அறிகுறிகளை இளம் பெண்கள் சமாளிப்பது மிகவும் கடினம்.
அறுவை சிகிச்சைக்குப் பின், கருக்குழாயில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவதால், பிறப்புறுப்பு வறட்சி, தாம்பத்திய உறவின் போது வலி ஏற்படலாம். குடல், சிறுநீர்ப் பாதையின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
சில பெண்கள், இடுப்பு பகுதியில் கனம், அழுத்தத்தை உணர்வர்.
ரத்தப்போக்கு, காய்ச்சல், விரும்பத்தகாத துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வடிவது, வயிறு, இடுப்பு வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வாந்தி, மூச்சுத்திணறல், காலில் வலி, வீக்கம் போன்றவையால் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும், தீவிர அறிகுறிகளும் வரலாம்.
டாக்டர் திவ்யா ஷரோனா, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர், விமன் அண்டு சில்ரன்ஸ் மருத்துவ மையம், சென்னை. 93846 74910 dhivya.sharona@relahospital.com
