தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆரோக்கியமான உணவை சாப்பிடுபவர்கள் சோர்வாக உணர்வது ஏன்?

ஆரோக்கியமான உணவை சாப்பிடுபவர்கள் சோர்வாக உணர்வது ஏன்?

ஆரோக்கியமான உணவை சாப்பிடுபவர்கள் சோர்வாக உணர்வது ஏன்?


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘எ ங்கள் வீட்டில் அனைவரும் ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுவோம்.

நிறைய புரதம், பழங்கள், காய்கறிகள், தவறாமல் உணவில் இடம் பெறும். ஆனாலும், பல நேரங்களில் சோர்வாகவே உணர்கிறோம். பல விதங்களில் யோசித்தாலும் காரணம் மட்டும் புரியவில்லை...’

சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு குடும்பத்தினர் கூறியது இது.

ஆரோக்கியமான உணவு என்பது போதுமான ஊட்டச்சத்துள்ள உணவை மட்டும் குறிக்காது.

வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிட்டாலும், போதுமான பழங்கள், காய்கறிகளை உட்கொண்டாலும், பொரித்த உணவுகள், சர்க்கரையை தவிர்த்தாலும், நாள் முழுதும் சோர்வாகவும், மந்தமாகவும், வேலையில் கவனம் செலுத்த முடியாமலும் உணரலாம்.

இதற்கு காரணம், சாப்பிடும் உணவின் அளவில் பிரச்னை இல்லை; மாறாக உணவில் இல்லாத ஒன்றினால் தான் சோர்வாக உணர்கிறோம்.

சோர்வு என்பது போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாததால் ஏற்படும் ஆற்றல் பற்றாக்குறையின் அறிகுறி.

முதலாவதாக சாப்பிடும் உணவில், கார்போ ஹைட்ரேட், புரதம், நல்ல கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை சமச்சீராக இருக்க வேண்டும்.

‘ஆரோக்கியமான’ உணவை உண்பவர்கள் போதுமான அளவு கார்போஹைட்ரேட், கொழுப்பு உட்கொள்வதில்லை. அதேசமயம், ஆரோக்கியமான உணவு என்ற பெயரில், அதிகப்படியான பழங்கள், பழச்சாறு, காய்கறிகள் சாப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக, ஆரோக்கியமான உணவு என்று நாம் சாப்பிடுவதும், போதுமான ஆற்றலைத் தருவதில்லை.

இருப்பினும், இந்த சோர்வு முறையற்ற உணவால் மட்டுமல்ல; துாக்கமின்மை, மன அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, சில உடல் கோளாறுகள், சில வகை மருந்துகளாலும் கூட ஏற்படலாம்.

மூளை, தசைகள் உட்பட உடலின் ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் தான் முக்கியம்.

முழு தானியங்கள், சிறுதானியங்கள், ஓட்ஸ், உமி நீக்காத அரிசி உள்ளிட்ட வற்றை, போதுமான அளவு சாப்பிடுவது நிலையான ஆற்றலைத் தரும்.

தசை வளர்ச்சி, புது செல்கள் உருவாக்கத்திற்கு புரதம் இன்றியமையாதது. உணவில் போதுமான புரதச்சத்து இல்லாதது, திருப்தியற்ற உணர்வையும், பலவீனமான தசைகளையும் ஏற்படுத்தும்.

பருப்புகள், பீன்ஸ், பயறு வகைகள், முட்டை, பால் பொருட்கள், மீன், கோழி, சோயா உட்பட புரதம் உணவில் இடம் பெற வேண்டும்.

நட்ஸ், விதைகள், அவகாடோ, தாவர எண்ணெய்களை சரியான அளவில் உட்கொண்டால், கொழுப்பு அமிலங்கள் உடலில் சேரும்; கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்களை, உடல் உறிஞ்ச உதவும்.

இரும்புச்சத்து, வைட்டமின் பி12, போலிக் அமிலம் அல்லது பிற ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையாலும், தொடர்ச்சியான சோர்வு ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ரத்தத்தால் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியாது.

இதனால் சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், கவனமின்மை ஏற்படும்.

வைட்டமின் ‘பி12’ குறைபாட்டால் சோர்வு, கூச்ச உணர்வு, மரத்துப் போதல் போன்ற நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

நீரிழப்பும், சோர்வு, தலைவலி, கவனம் செலுத்த இயலாமையின் காரணிகளில் ஒன்று; நீரின் தேவை நபருக்கு நபர் மாறுபடும்.

ரத்தசோகை, தைராய்டு கோளாறுகள், நீரிழிவு, துாக்கமின்மை, தொற்றுகள் ஆகியவையும் சோர்வை ஏற்படுத்தலாம்.

டாக்டர் பேர்ல்சி கிரேஸ் ராஜன், உள்மருத்துவம், ரேலா மருத்துவமனை, சென்னை.

044 - 6666 7777

pearlsy,grace@relainstitute.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us