தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சரியான அளவில் புரதம் கிடைக்க எளிய வழி!

சரியான அளவில் புரதம் கிடைக்க எளிய வழி!

சரியான அளவில் புரதம் கிடைக்க எளிய வழி!


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் என்ற அளவில் தினசரி, 60 கிராம் புரதம் சாப்பிட வேண்டும் என்பது தெரிந்த விஷயம். ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் செய்த ஆய்வில், நம் நாட்டின் கிராமப்புறங்களில், தினமும் 61.8 கிராம் புரதமும், நகர்ப்புறங்களில் 63.4 கிராம் புரதமும் சாப்பிடுவது தெரிய வந்துள்ளது.

சாப்பிடும் தானியங்களில் இருந்து, தினசரி புரத தேவையில் பாதிக்கும் அதிகமான புரதத்தை கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 46 - 47 சதவீதமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 39 சதவீதமும் பெற்று விடுகின்றனர். பருப்பு வகைகளில் இருந்து, 8 - 9 சதவீதம், பால் பொருட்கள் வாயிலாக 10 - 13 சதவீதம், முட்டை, மீன், இறைச்சி இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் 12 - 14 சதவீதத்துக்கு கிடைக்கிறது.

போதிய அளவு புரதம் தினசரி உணவில் இடம் பெற்றும் ஏன் புரத குறைபாடு வருகிறது என்ற சந்தேகம் வருவது இயல்பு தானே!

கோதுமை, அரிசி, மக்காச்சோளம் உட்பட தானியங்களில் இருந்து பெறப்படும் தானிய புரதங்கள் 'தரம் குறைந்த புரதம்' என்று சொல்லப்படுகின்றன. காரணம், நம் உடலுக்கு தேவையான, உடலால் உருவாக்க முடியாத, உணவின் மூலம் மட்டுமே பெற வேண்டிய முக்கியமான 'லைசின்' அமினோ அமிலம் தானியங்களில் குறைவாக உள்ளது.

எனவே, இறைச்சி, முட்டை அல்லது பால் பொருட்களிலிருந்து பெறப்படும் புரதத்துடன் ஒப்பிடும்போது, தானிய புரதங்கள் ஊட்டச்சத்து ரீதியாக முழுமையான புரதம் இல்லை.

தானியங்களில் போதிய அளவு புரதம் இருந்தாலும், கலோரி அதிக அளவில் இருப்பதால், ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கிறது.

உதாரணமாக, 4 கோதுமை ரொட்டிகளில், 18 கிராம் முழுமையற்ற புரதம் உள்ளது; கார்போஹைட்ரேட்டின் அளவு 74 கிராம் உள்ளது.

பால், முட்டை, இறைச்சி மற்றும் மீன் போன்ற மூலங் களிலிருந்து பெறப்படும் விலங்கு வழி புரதங்கள் பொதுவாக அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் முழுமை யாகக் கொண்டுள்ளன.



'வே' புரதம்


தினசரி உணவில் இருந்து தேவையான அளவு புரதம் கிடைக்காதவர்கள், 'பாலையும் அதிலுள்ள சத்துக்கள் நிறைந்த திரவத்தையும் பிரிக்கும் போது கிடைக்கும் புரதமான 'வே புரோட்டீனை சாப்பிடலாம்.

ஆனால், 'வே' புரதப் பொடிகள் எந்த விதத்திலும் புரத உணவுகளுக்கு மாற்றாக இருக்கவே முடியாது.

காரணம், இவற்றில் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத முழுமையான நார்ச்சத்து, நுண்ணுாட்டச் சத்துக்கள், பாஸ்போலிப்பிடுகள் மற்றும் உயிரியல் ரீதியாகக் கிடைக்க கூடிய தாதுக்கள் போன்ற உணவுகளில் இருந்து இயற்கையாக கிடைக்க கூடிய மூலக்கூறுகள், 'வே' புரதப் பொடிகளில் இல்லை.

சப்ளிமென்ட்ஸ் எனப்படும் இணை உணவுகள், தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே உபயோகிக்க வேண்டியவை.

காரணம், ஒரு கிலோ உடல் எடைக்கு 2 கிராமுக்கு மேல் புரதப் பொடி உட்கொள்வது சிறுநீரகத்தின் வேலையை அதிகரிக்கும்.

சிறுநீரக நோய், பிற மருத்துவ கோளாறுகள் உள்ளவர்கள், டாக்டரின் அறிவுரையின் படி மட்டுமே, 'வே' புரதம் சாப்பிட வேண்டும்.

'அதிக புரதம்' என்று பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட பால், அதிக விலையில் விற்கப்படும் உணவுகளை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.



டாக்டர் அருண் ராகவன், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற மருத்துவ ஆலோசகர், ரிவைவோ கிளினிக், சென்னை. 75500 11866

arun334@yahoo.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us