PUBLISHED ON : நவ 22, 2026

சில உடல்நலப் பிரச்னைகளைப் பற்றி, வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குகிறோம். அதில், ஒன்று ஆசனவாயில் ஏற்படும் ‘பிஸ்டுல்லா’ எனப்படும், பவுத்திரக் கோளாறு.
இப்பாதிப்புக்கு உள்ளான பலர், பல மாதங்களாக வலி, சீழ் வடிதல் போன்ற அறி குறிகளுடன் அவதிப்பட்டாலும், மருத்துவரை அணுக தயங்குகின்றனர்.
ஆசனவாயின் உட்பகுதியில், சிறிய சுரப்பிகள் உள்ளன. இவற்றில், ஒன்று அடைபட்டு, நோய் தொற்று ஏற்பட்டால், அது சீழ் கோர்த்து கட்டியாக மாறும்; தசைகள் சுருங்கி, விரியும் போது, தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். கட்டி தானாக உடையும் போதோ, அறுவை சிகிச்சை மூலம் சீழ் வெளியேற்றப்படும் போதோ, சில நேரங்களில் தோலுக்கு அடியில், ஆசனவாயின் உட்பகுதியையும், வெளிப்புறத் தோலையும் இணைக்கும் விதமாக, குறுகிய பாதை உருவாகும். இப்பாதை தான் ஆசனவாய் ‘பிஸ்டுல்லா’ எனப்படும்.
‘பைல்ஸ்’ எனப்படும் மூல நோய்க்கும் இதற்கும் தொடர்பில்லை.
நீண்ட கால மலச்சிக்கல், சர்க்கரை நோய், காசநோய் மற்றும் சில குடல் தொடர்பான நோய்கள் இருந்தால், பிஸ்டுல்லா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அறிகுறிகள்
ஆசனவாயின் அருகே மீண்டும் மீண்டும் கொப்புளம், வீக்கம் ஏற்படுவது, சீழ், ரத்தம், திரவம் வடிதல், உட்காரும் போது, நடக்கும் போது, மலம் கழிக்கும் போது வலி, அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது, சில நேரங்களில், வலி, வீக்கத்துடன் காய்ச்சல் வருவது ஆகியவை
நோய்த்தொற்று காரணமாக, பாதை தொடர்ந்து திறந்த நிலையிலேயே இருப்பதால் தான், இப்பிரச்னை தானாக குணமாகாது. ஆரம்ப கட்டத்தில், மருந்துகள், களிம்புகள் தற்காலிக நிவாரணம் தரும். பெரும்பாலும், பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆயுர்வேத சிகிச்சை
ஆயுர்வேத மருத்துவத்தில், பிஸ்டுல்லா பாதிப்பை. ‘பகவந்தரம்’ என்று அழைக்கிறோம். இதற்கான சிகிச்சை முறையான, காரத்தன்மை நிறைந்த, மூலிகை மருந்து நுாலை, பிஸ்டுல்லா பாதையின் வழியாகச் செலுத்திக் கட்டப்படும்.‘க்ஷார சூத்திரம்’ குறித்து, பழமையான ஆயுர்வேத நுாலான, ‘சுஷ்ருத சம்ஹிதா’வில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. பொதுவாக, மருத்துவர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில், பழைய நுால் அகற்றப்பட்டு, புதிய மருத்துவ நுால் மாற்றப்படும்.
இந்நுாலில், பூசப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள், பிஸ்டுல்லா பாதையைச் சுத்தப்படுத்தி, ஒவ்வொரு முறையும் நுால் மாற்றப்படும் போது, ஆரோக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.
இந்தச் சிகிச்சை செய்யும் போது, ஆசன வாயைச் சுற்றி மரத்து போவதற்கு மயக்க மருந்து தரப்படும்.
அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட, பல மருத்துவ ஆய்வுகள், க்ஷார சூத்திர சிகிச்சைக்குப் பின், பிஸ்டுல்லா மீண்டும் ஏற்படுவது வெகுவாக குறைந்திருப்பதை உறுதி செய்கின்றன.
ஆயுர்வேதத்தில், முதுநிலை பட்டம் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிஸ்டுல்லா சிகிச்சை உள்ளிட்ட சில ஆசனவாய் மற்றும் மலக்குடல் தொடர்பான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள, இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பிஸ்டுல்லா முழுமையாக குணமடைய, பல வாரங்கள், மாதங்கள் வரை ஆகலாம்.
இந்தக் காலகட்டத்தில் நுாலை மாற்றுவதற்காகத் தொடர்ந்து மருத்துவரைச் சந்திப்பது அவசியம். சிகிச்சையை இடையிலேயே நிறுத்தினால், நோய் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிகிச்சையின்போது, லேசான அசவுகரியம், திரவம், சீழ் வடிதல் இயல்பானது.
எல்லா பிஸ்டுல்லா பாதிப்புகளும் ஒரே மாதிரியானவை அல்ல. எனவே, எந்தவொரு சிகிச்சையையும் தொடங்குவதற்கு முன், முறை யான மருத்துவப் பரிசோதனை அவசியம். தகுதியும், உரிய பதிவும் பெற்ற மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். உடனடியாக குணப்படுத்தி விடுவதாக சொல்பவர்களிடம், எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
டாக்டர் சித்தாரா ஆர்.வி, அறுவை சிகிச்சை நிபுணர், அப்பல்லோ ஆயுர்வேதா மருத்துவமனை, சென்னை. 95666 25848 greams@ayurvaid.com
