வீட்டு சாப்பாடு சாப்பிட்டும் ஏன் உடல் எடை குறையவில்லை?
வீட்டு சாப்பாடு சாப்பிட்டும் ஏன் உடல் எடை குறையவில்லை?
PUBLISHED ON : அக் 25, 2026

உணவில் பயன்படுத்தப்படும் பொருட்கள், சாப்பிடும் அளவு, சமைக்கும் முறை, எத்தனை முறை சாப்பிடுகிறோம், என்பதும் முக்கியம்.
நம் வீடுகளில் சமைக்கும் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை ஆரோக்கியமற்ற உணவுகள் அல்ல; அவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது.
ஆனால், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது தான் பிரச்னையே.
வழக்கமான உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில், ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற துாண்டுதலால் அதிகமாக சாப்பிடுவதன் காரணமாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது.
சாப்பாடுகளுக்கு இடையிடையே பிஸ்கட், பிரெட், இனிப்புகள், இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், சிற்றுண்டிகளை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது.
சாப்பாடு மீதம் இருக்கிறது, வீணாக்க வேண்டாம்’ என்று சாப்பிட்டு விடும் பழக்கமும் பலரிடம் உள்ளது.
உணவை வீணாக்காமல் இருப்பது நல்ல பழக்கம். ஆனால், பசி இல்லாதபோதும் மீந்த உணவை சாப்பிடுவது, படிப்படியாக அதிகமாக சாப்பிடும் பழக்கமாக மாறிவிடும்.
இதைத் தவிர்க்க, தேவையான அளவு உணவை மட்டும் சமைப்பது, மீதமான உணவை பாதுகாப்பாக வைத்து, பசி ஏற்படும் போது சாப்பிடுவது என்ற பழக்கத்தைப் பின்பற்றலாம்.
வண்ணமயமான உணவு விளம்பரம், 'டிவி' விளம்பரம், சமூக வலைதள வீடியோக்களில் பிடித்த உணவைப் பார்ப்பது கூட, உணவின் மீது ஆசையை ஏற்படுத்தும்.
உணவுத் தட்டில், வழக்கமாக சாப்பிடும் அரிசி சாதம், சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றின் அளவை பாதியாகக் குறைத்து, காய்கறிகள், பழங்களின் அளவை வழக்கத்தை விட இரு மடங்காக அதிகரிப்பது, உடல் எடை குறைப்பில் நல்ல பலன் தரும்.
பருப்பு, பயறு வகைகள், முட்டை, மீன், கோழி இறைச்சி, தயிர், பனீர், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் ஆகியவை வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும்; வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட, சுத்திகரித்த உணவுகளை குழந்தை பருவத்திலேயே தவிர்த்து, சமச்சீரான உணவு பழக்கத்தை ஏற்படுத்தினால், 60 வயதிலும் அப்பழக்கம் தொடரும்.
உடற்பயிற்சி செய்பவர்கள், புரதத்தை மட்டும் அதிகரிப்பதில் கவனம் செலுத்தாமல், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களையும் சமச்சீராக சாப்பிட வேண்டும்.
வீ ட்டில் சமைத்த உணவைத்தான் சாப்பிடுகிறேன், ‘ஜங்க் புட்’ தொடுவது கூட இல்லை. அப்படியிருக்க உடல் பருமன் ஏன் குறைய மாட்டேன் என்கிறது? ஏன் சர்க்கரை நோய், கல்லீரலில், அதீத கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது? 40 வயதை கடந்த பலர் தவறாமல் கேட்கும் கேள்வி இது. வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது நிச்சயமாக நல்ல பழக்கம். ஆனால், வீட்டில் சமைக்கப்படும் உணவு என்பதாலேயே அது சமச்சீரான உணவு என்று சொல்லிவிட முடியாது.
டாக்டர் அனிருதா சீனிவாசன், பொது நல மருத்துவர், சென்னை. 044 – 4477 7000 dranirudhasrinivasan @outlook.com
