PUBLISHED ON : ஆக 09, 2026

மனித உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ள இயற்கை அளித்துள்ள மிகப்பெரிய மருந்து உறக்கம். உணவிற்கும் உடற்பயிற்சிக்கும் முக்கி யத்துவம் கொடுக்கும் நாம், உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ எனத் தோன்றுகிறது. என்ன தான் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டாலும், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தாலும், போதுமான அளவு உறக்க ம் இல்லையென்றால், அத்தனையும் வீண் தான்.
நம்முடைய உடல், சூரியன், சந்திரன் அடிப்படையில் தான் இயங்கும். அப்படிப் பார்த்தால், காலை சூரியன் உதிப்பதற்கு முன் அல்லது உதித்து அரை மணி நேரம் கழித்து, 5:30 - -6:09 மணிக்குள் எழுந்து விட வேண்டும்.
இரவு சூரியன் மறைந்த பின், இரண்டு மணி நேரம் கழித்து, 7:00 -- 8:00 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டும். இன்று இது சாத்தியமில்லை என்பதால், 'பத்தரைக்கு நித்திரை' என்ற பழமொழிக்கு ஏற்ப, உறங்கச் சென்று விட வேண்டும்.
நம் உடல் இரவு 11:00 - - 3.00 மணி வரை நல்ல உறக்கத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த நேரத்தில் தான், 'ரிப்பேரிங்' எனப்படும் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் வேலை நடக்கும். இப்படி இருந்தால் தான், புதிய நாளை புத்துணர்வுடன் எதிர்கொள்ள நம் உடல் தயாராகும். இந்நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் இல்லாவிட்டாலும், இடையிடையே விழித்துக் கொண்டாலும், ஜீரண மண்டலம் சரியாக இயங்கவில்லை என்று பொருள். இரவு தாமதமா க உணவு சாப்பிடுபவர்கள், அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்கள், மனச் சோர்வில் இருப்பவர்கள் துாக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவர்.
பகலில் உறங்குவது, குறிப்பாக, 11.00 - 3.00 மணி வரை உடல் சாய்வு நிலையில் இருக்கவே கூடாது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
பகலில் உறங்கும் போது, செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது. ரத்த சோகை உட்பட பல பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது.
ஆழ்ந்த துாக்கம் வர...
* இரவு உணவை அதிகபட்சம் ஏழரை மணிக்குள் முடித்துக் கொள்வது
* உறங்கச் செல்வதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் கால்களை ஐந்து நிமிடங்கள் வைத்திருப்பது
* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சில துளிகள் எடுத்து, காதின் பின்புறம், தொப்புளில் தேய்த்து விடுவது , ஜாதிக்காய், அதிமதுரம், கசகசா போன்ற மூலிகைகள் துாக்கத்திற்கு உதவி செய்யும். எப்படி உபயோகிக்கலாம் என்பதற்கு, மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
டாக்டர் க.மது கார்தீஷ் ,
சித்த மருத்துவர், சென்னை.
99944 93687drmadhu kaartheesh@Gmail.com
