சர்க்கரையை உங்கள் கைப்பிடிக்குள் வைக்க இதோ ஒரு டயட் சார்ட்!
சர்க்கரையை உங்கள் கைப்பிடிக்குள் வைக்க இதோ ஒரு டயட் சார்ட்!
PUBLISHED ON : நவ 01, 2026

கோவை: அரிசிக்கு பதிலாக கோதுமையை சாப்பிட்டாலும், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவில் மாற்றம் ஏற்படாது. இட்லி, தோசை என குறிப்பிட்ட உணவை தொடர்ந்து சாப்பிட கூடாது. ஓட்சை காட்டிலும், பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், முழு தானியங்களை கொண்ட சிறந்த டயட் பிளான் உருவாக்கலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நவமணி. அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:
உணவில் சேர்க்க வேண்டியவை:
* பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்கள்: வெள்ளை அரிசிக்கு மாற்றாக கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கவுனி அரிசி மற்றும் கம்பு, சோளம், ராகி போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக, கவுனி அரிசி சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இதை இட்லி, பொங்கல், கஞ்சியாக சாப்பிடலாம்.
* நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள்: பச்சை நிற காய்கறிகளைத் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து வகை கீரைகளையும் உணவில் சேர்த்து கொள்ளலாம். முருங்கை கீரை சூப் வைத்து, காலை, மாலையில் சாப்பிடுவது நல்லது.
* புரதச்சத்து: பருப்பு வகைகள், நட்ஸ், முளைகட்டிய பயறுகள், முட்டையின் வெள்ளைக் கரு, மீன் மற்றும் தோல் நீக்கிய கோழிக்கறியை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.
* பழங்கள்: குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட கொய்யா, ஆப்பிள், பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு மற்றும் வெள்ளரிக்காயை அப்படியே மென்று சாப்பிடலாம். பழங்களை ஜூஸாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்; அது ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே உயர்த்திவிடும்.
* நீர்ச்சத்து: நாள்தோறும் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பு சேர்த்த எலுமிச்சை சாறு, மோர், கீரை சூப் மற்றும் கிரீன் டீ ஆகியவற்றையும் அருந்தலாம்.
தவிர்க்க வேண்டியவை
* பட்டை தீட்டிய மாவுப் பொருள்கள்: வெள்ளை அரிசி சாதம், மைதா, பேக்கரி பண்டங்கள், வெள்ளை அரிசியில் செய்த இட்லி, தோசை.
* இனிப்புகள்: சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள் மற்றும் பதப்படுத்திய பழச்சாறுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். விருந்தில் அதிக இனிப்பு சாப்பிட்டுவிட்டு, சிலர் இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்வர். அது முற்றிலும் தவறு. சர்க்கரை அளவு திடீரென குறைந்து ஆபத்து ஏற்படலாம்.
* அதிக சர்க்கரை கொண்ட பழங்கள்: மா, பலா, வாழை, சப்போட்டா, திராட்சை, உலர் திராட்சை மற்றும் பேரீச்சம்பழம்.
* கிழங்கு வகைகள்: உருளைக்கிழங்கு, பீட்ரூட், சேனைக்கிழங்குகள்.
* கொழுப்பு உணவுகள்: எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், வெண்ணெய், நெய் மற்றும் அதிகஅளவு தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெயை அளவோடு பயன்படுத்தலாம்.
இத்துடன், தினமும் குறைந்தது 45 நிமிடம் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். டாக்டர் பரிந்துரைத்த மருந்தை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: 93846 85577.
