மாதவிடாய் ஒழுங்கின்மைக்கு பின் ஒளிந்திருக்கும் அபாயம்
மாதவிடாய் ஒழுங்கின்மைக்கு பின் ஒளிந்திருக்கும் அபாயம்
PUBLISHED ON : அக் 11, 2026

பெண்களின் மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மகளிர் நலம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து, அரசு மருத்துவமனை மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவு துறைத்தலைவர் டாக்டர் கீதா நம்மிடம் பகிர்ந்தவை:
* மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி இயல்பானதா?
பொதுவாக பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இதில் 7 நாட்கள் முன்போ அல்லது பின்போ வரலாம்; அதேபோல் உதிரப்போக்கு 3 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம். இச்சமயத்தில் லேசான வயிற்றுவலி ஏற்படுவது இயல்பு. ஆனால், வலி நிவாரண மாத்திரைகள் போட்டும் வலி குறையாமல் இருந்தாலோ அல்லது அந்த வலி அன்றாட பணிகளை செய்யவிடாமல் பாதித்தாலோ, உடனே மருத்துவரை அணுக வேண்டும். எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கருப்பையில் கிருமித்தொற்று போன்ற காரணங்களாலும் தீவிர வயிற்றுவலி ஏற்படலாம்.
* அதிக ரத்தப்போக்கு அல்லது நீண்ட நாட்கள் மாதவிடாய் இருப்பதற்கு என்ன காரணம்?
கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் இருத்தல், கருப்பையின் உள்பகுதியில் சிறிய சதை வளர்ச்சி போல் உருவாகும் பாலிப்ஸ், அடினோமயோசிஸ் மற்றும் கிருமித்தொற்றுகள் இருப்பது முக்கிய காரணமாக இருக்கலாம். மூளையிலிருந்து கருப்பைக்கு சிக்னல் கொடுக்கும், 'ஹைபோதலாமிக்-பிட்யூட்டரி-கருப்பை அச்சு' சீர்குலைந்து, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலையின்மையாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.
* பெண்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கருப்பை நார்த்திசுக் கட்டி (Fibroid) என்றால் என்ன? அதன் அறிகுறிகள் பற்றி?
ஃபைப்ராய்டு என்பது கருப்பையில் உருவாகும் தசை அல்லது கொழுப்பு சார்ந்த ஒரு கட்டி. இது புற்றுநோய்க் கட்டி அல்ல. பரிசோதனை செய்யப்படும் பெண்களில் சுமார், 30 சதவீதம் பேருக்கு இக்கட்டிகள் காணப்படலாம். எல்லா கட்டிகளையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய அவசியமில்லை; தொந்தரவு தரும் கட்டிகளுக்கு மட்டும் சிகிச்சை போதுமானது.
மிக அதிக ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, அடிவயிற்று வலி மற்றும் கட்டி இருப்பது போன்ற உணர்வு, கட்டி பெரிதாகி சிறுநீர்ப்பையை அழுத்தும்போது சிறுநீர் கழிப்பதில் சிரமம், குடலை அழுத்தும்போது மலம் கழிப்பதில் சிக்கல், சிலருக்குக் குழந்தைப்பேறின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
* வாழ்வியல் முறைகளால் ஏற்படும் ஹார்மோன் சமநிலை பற்றி?
இன்றைய சூழலில் பள்ளி பருவத்திலிருந்தே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற உடலுழைப்பு பெருமளவில் குறைந்துவிட்டது. படிப்பினால் ஏற்படும் மன அழுத்தம், துரித உணவு உண்பது ஆகியவை சினைப்பையில் நீர்க்கட்டிகளை உருவாக்கி மெட்டபாலிக் சிண்ட்ரோமை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக நள்ளிரவு 1- 2 மணி வரை தூங்காமல் விழித்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரவில் முழு இருட்டில் மட்டுமே சுரக்கும், 'மெலடோனின்' ஹார்மோன், சினைப்பையின் இயல்பான செயல்பாட்டிற்கு மிக அவசியமானது. தூக்கமின்மை இந்த சமநிலையைக் குலைத்து மாதவிடாய் கோளாறுகள், சர்க்கரை நோய், பிற்காலத்தில் கருப்பை புற்றுநோய், குழந்தைப்பேறின்மைக்கும் வழிவகுக்கலாம்.
* மெனோபாஸ் வருவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
பொதுவாக 45 முதல் 55 வயதிற்குள் மெனோபாஸ் நிலை ஏற்படும். இந்த மாற்றுக் காலத்தில் சினைமுட்டைகளின் இருப்பு படிப்படியாகக் குறையும். வழக்கமாக 30 நாட்களுக்கு ஒருமுறை வந்த மாதவிடாய் 45, 60 அல்லது 90 நாட்களுக்கு ஒருமுறை என கால இடைவெளி அதிகரித்து வரும். 5 நாட்கள் வந்த உதிரப்போக்கு, 2 நாட்களாகவோ அல்லது ஒரு நாளாகவோ குறையும். ரத்தப்போக்கின் அளவும் மிகக் குறைவாக இருக்கும்.
* மெனோபாஸ் காலத்தில் உடல், மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
சினைப்பையின் ஹார்மோன் குறைவதால் தலைவலி, திடீர் கோபம், உடல் அனலாகக் கொதிப்பது, உடலின் உட்பகுதிகளில் வறட்சி மற்றும் சிறுநீர்ப் பாதை உபாதைகள் ஏற்படும்.
இதை கட்டுப்படுத்த, உணவு, உடற்பயிற்சி கைக்கொடுக்கும். குறிப்பாக பால், மீன், முட்டை போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும், வைட்டமின்-டி சத்துக்களையும் போதிய அளவு உட்கொள்ள வேண்டும். சோயா பீன்ஸ் போன்ற பைட்டோ-ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவு சேர்க்கலாம். இத்துடன், நடைப்பயிற்சி, யோகா செய்வதால், உடல், மனநிலை சீராக வைத்திருக்க உதவும்.
* பெண்கள் எந்தெந்த விஷயங்களில் இன்னும் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டும்?
பெண்கள் 35- 40 வயதை எட்டும்போதே, தங்களது வாழ்க்கைமுறையில் கூடுதல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். துரித உணவு தவிர்த்து ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளுதல், தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை சீராக பராமரிப்பது மிக அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடித்தாலே ஹார்மோன் சீர்குலைவுகள் மற்றும் பிற்கால பிரச்னைகளில் இருந்து முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
PCOS/PCOD என்றால் என்ன? அதன் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது?
''முன்பு இதனை PCOD அல்லது PCOS என்று அழைத்தோம்; ஆனால் மே 2026 முதல் மருத்துவ ரீதியாக இதனை PMOS (Polyendocrine Metabolic Ovarian Syndrome) என்று அழைக்கிறோம். ஏனெனில் இது சினைப்பையில் மட்டும் ஏற்படும் நீர்க்கட்டி பிரச்னை அல்ல, முழு உடலையும் மெட்டபாலிசத்தையும் பாதிக்கிறது. உதிரப்போக்கு குறைவது, மாதவிடாய் பல மாதங்கள் தள்ளிப்போவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது இதன் முக்கிய ஆரம்ப அறிகுறிகளாகும்''
டாக்டர் கீதா
தொடர்புக்கு: geethaveeramuthu.me@gmail.com
