PUBLISHED ON : ஆக 31, 2025

சமூக ஊடகங்களை பார்த்து வளரும் இன்றைய இளம் தலைமுறையினர், தங்களை மற்றவர்களுடன் எந்நேரமும் ஒப்பீடு செய்து, நமக்கு இவர் களைப் போன்று திறமை, தகுதி இல்லையோ என்ற சந்தேகத்துடனேயே வாழ்கின்றனர்.
இது போன்ற எதிர்மறையான எண்ணங்களால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குள் உணர்வுபூர்வமான குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து தோற்றம், திறமை உட்பட அனைத்து அம்சங்களிலும் தன்னை பற்றி எதிர்மறை உணர்வுகளோடு இருந்தால், தனிப்பட்ட திறமை, நம்பிக்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மனதளவில் பல சிக்கலான பாதிப்புகளும் வரலாம். அந்த பாதிப்புகள் நீண்ட காலம் அப்படியே இருபந்தால், பதட்டம், மன அழுத்தம், படிப்பு, வேலையில் முழு திறனையும் வெளிப்படுத்த முடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
யதார்த்தத்திற்கு மாறாக...
சமூக வலைதளங்களில் மிக சிலர் தவிர, மற்றவர்கள் சிறந்ததை மட்டுமே 'எடிட்' செய்து, 'போஸ்ட்' செய்கின்றனர். உள்ளது உள்ளபடி யாரும் காட்டுவதில்ல என்ற நிஜத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
எதைச் செய்தாலும் 'பெஸ்ட் ரிசல்ட்' வர வேண்டும் என்ற எண்ணமும் இளம் வயதினரிடம் இருக்கிறது. தேர்வுகளில் டாப் கிரேடு வாங்குவது, கச்சிதமான உடல்வாகு, நல்ல வேலை, அதிக சம்பளம் என்று இந்த பட்டியல் நீள்கிறது.
அப்படி கிடைக்காத பட்சத்தில் நினைத்தது எதையும் சாதிக்கவில்லை, விரும்பியது கிடைக்கவில்லை என்று நினைத்து சோர்ந்து விடுகின்றனர். இதனால், கிடைத்த அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதற்கு பதிலாக வாழ்க்கையில் தோற்று விட்டதாக எண்ணுகின்றனர்.
இரண்டு பக்கமும் அழுத்தம்
இளம் வயதினர் பலரும் செய்யும் தவறு, மல்டி டாஸ்கிங் எனப்படும் பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் தங்களால் செய்ய முடியும் என்று நம்புவது.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே சமயத்தில் இரு வேலைகளைச் செய்யும் போது நம்முடைய 100 சதவீத பங்களிப்பு இரண்டிற்கும் கிடைக்காது. அரைகுறையாகவே இரண்டையும் செய்ய முடியும் என்பது தான் நிஜம்.
இதையும் பலர் தவறாக புரிந்து கொண்டு, நம்மால் எதையும் உருப்படியாக செய்ய முடியாதோ என்ற தேவையற்ற குற்ற உணர்வையும், ஏமாற்றத்தையும் வளர்த்துக் கொள்கின்றனர்.
தன்னம்பிக்கையை வளர்க்க...
மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயலை தினமும் செய்வது, பிடித்த இசை கேட்பது, விரும்பமான உணவு சாப்பிடுவது, ஷவரில் குளிப்பது போன்ற சிறிய விஷயங்கள் நம் முக்கியத்தை நமக்கு உணர்த்தும்.
கூனி, குறுகி அமராமல், நிமிர்ந்து அமர்வது, நிற்கும் போது தோள்களை குறுக்காமல் நிமிர்ந்து நிற்பது தன்னம்பிக்கையைத் தரும். உடலை நல்ல நிலையில் வைக்கும் இது போன்ற விஷயங்களால், மூளையில் உற்சாகம் தரும் வேதிப்பொருட்கள் அதிகம் சுரந்து, என்னால் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற சமிக்ஞையை மூளைக்கு அளிப்பதாக பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
தினமும் 20 நிமிட நடை, ஸ்ட்ரெச்சிங், நடனம், சில ஸ்குவாட்ஸ் என்று ஏதாவது ஒரு வகையில் உடலை வளைப்பது மனநிலையை உற்சாகம் அடையச் செய்யும். இது உள்ளேயும் வெளியேயும் வலிமையாக நம்மை உணரச் செய்யும்.
பதட்டமாக உணரும் போது சுவாசப் பயிற்சி செய்யலாம்.
பாதங்களை தரையில் அழுத்தமாக ஊன்றி, நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்னால் இதைச் செய்ய முடியும் என்று சொல்ல வேண்டும்.
நம்மால் முடியாத விஷயத்திற்கு 'நோ' சொல்லப் பழக வேண்டும்.
நல்ல துாக்கம், உணவு முக்கியம்
தன்னம்பிக்கை என்பது நாம் பிறக்கும் போது கூடவே பிறந்தது இல்லை. படிப்படியாகத்தான் நாம் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில்,பெற்றோர், பாதுகாவலருக்கு முக்கிய பங்கு உள்ளது.
குழந்தைகள் பேசுவதை காது கொடுத்துக் கேட்பது, அன்பான வார்த்தைகள், எந்த முன் தீர்மானமும் இல்லாமல் கேட்பது, இளம் வயதினர் மத்தியில், அவர்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை மாற்ற உதவும்.
டாக்டர் வி.மிருதுல்லா அபிராமி, மனநல மருத்துவ ஆலோசகர், ஐஸ்வர்யா மருத்துவமனை, சென்னை 044 - 20252025, 98401 05510ccc@iswarya.in