PUBLISHED ON : ஜன 11, 2026

வாழ்க்கை எப்போதும் நாம் திட்டப்படி நடக்கும் என்று கூறமுடியாது. விபத்து, திடீர் நோய், முதுமை போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள, தயாராக இருக்கவேண்டும் என்கிறார் வழக்கறிஞர் பிரீத்தி ராகவேந்திரன். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
* முதுமையை மகிழ்ச்சியாக அனுபவிக்க, நாம் சில விஷயங்களை முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். முதலில், வங்கி கணக்குகள், காப்பீடு, நகைகள், நிலம், கடன் விவரங்கள் போன்றவை, தெளிவாக ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
* சொத்து விவகாரம் சட்ட சிக்கல்களாக மாறி பல குடும்பங்களில் உறவுகளை தொலைத்து, சொத்துக்களும் முடங்கி இருப்பதை காண்கிறோம். உயில் எழுதிவிட்டால் உடனடியாக எல்லாம் மாறிவிடும் என்று அல்ல, எப்போது அவர்கள் கைக்கு சொத்து அல்லது பொறுப்பு செல்லவேண்டும் என்பதை கூட, உயிலில் தெளிவுபடுத்த முடியும்.
* வங்கி கணக்கு மட்டுமின்றி மருத்துவ விவரங்கள், அதுசார்ந்த கோப்புகளையும் பத்திரமாக ஒரே இடத்தில் வைக்கவேண்டியது அவசியம். ஒரே டாக்டர் அல்லது மருத்துவமனையை அணுகும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அவசர சமயங்களில் நம் உடல்நிலை குறித்து அறிந்து சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும். அந்த இடம் பற்றி குறைந்தது ஒரு நம்பகமான நபருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
* அவசர பட்டியல் ஒன்றை தயார் செய்து அதில் மகன், மகள், முக்கிய உறவினர்கள், அண்டை வீட்டார், டாக்டர், போலீஸ் போன்ற எண்களை எழுதி, எளிதாக எடுக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
* முதியோர் தனியாக வசிக்கும் வீடுகளில், கட்டாயம் சி.சி.டி.வி., கேமரா பொருத்திக்கொள்வதும், பணியாளர்கள், டிரைவர்கள் இருப்பின் அவர்களின் முழுமையான விவரங்களை எழுதி வைப்பதும் அவசியம்.
* நகை மதிப்பு அதிகம் என்பதால் அதனால் ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளது. நகைகளை வீடுகளில் வைக்காமல் இருப்பது பாதுகாப்பானது.

