பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை பருமனான எல்லோருக்கும் தேவையா?
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை பருமனான எல்லோருக்கும் தேவையா?
PUBLISHED ON : டிச 14, 2025

அதிக உடல் பருமனால் இயங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும், பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.சரி, பருமனான எல்லோருக்கும் இந்த சிகிச்சை பலன் அளிக்குமா?
விளக்குகிறார், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரவீன் ராஜ்.
யாருக்கு இந்த அறுவை சிகிச்சை ஏற்றது?
பேரியாட்ரிக் என்பது வயிறு மற்றும் குடல் பகுதிகளில், தேவைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறை. இம்முறை, உடல் பருமன் உள்ள அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதிக உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு மட்டுமே, இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
பி.எம்.ஐ.,40க்கு மேல் இருப்பவர்கள், இந்த அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவர்கள். உதாரணத்துக்கு, 5 அடி 6 அங்குலம் உயரம் உள்ள 110 கிலோவுக்கு மேல் இருப்போருக்கு இந்த சிகிச்சை ஓகே. பி.எம்.ஐ., 35க்கு மேல் இருந்து, அதோடு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி, தைராய்டு போன்ற இணை நோய்கள் இருந்தாலும், இச்சிகிச்சை ஆலோசிக்கப்படும்.
இந்த அறுவை சிகிச்சை யாருக்கு ஏற்றதல்ல?
குறைந்தது ஆறு மாதங்கள் டாக்டர்கள் மேற்பார்வையில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் வாயிலாக எடை குறைக்க முயன்றும் பலன் அளிக்காதவர்களுக்கு ஏற்றது. குறிப்பாக, கட்டுப்படுத்த முடியாத இதய நோய், கல்லீரல் செயலிழப்பு, க ர்ப்பம், மது அல்லது போதைக்கு அடிமையானவர்கள், புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள், கடுமையான மனநல பிரச்னை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும்?
அறுவைசிகிச்சைக்கு பிறகு, இரண்டு முதல் ஐந்து நாட்கள் தங்க வேண்டும். அதன் பிறகு, வீட்டிலேயே மருத்துவ குழுவின் ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
பேரியாட்ரிக் சிகிச்சைக்கு பிறகு உணவு முறை எவ்வாறு இருக்கும்?
அறுவைசிகிச்சை முடிந்தவுடன் முதல் இரண்டு வாரம், திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை வெறும், எடை குறைப்பு மட்டுமல்ல, ஒரு புதிய வாழ்க்கை முறை என்று தான் கூறவேண்டும்.
இரண்டாம் வாரம் மென்மையான மசித்த உணவு சாப்பிட துவங்கலாம். ஒவ் வொரு முறையும் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், உணவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதன் பின், மெதுவாக, குழைவான உணவுக்கு மாறலாம்.
தொடர்ந்து 3-6 மாதங்களில் சாதாரண, ஆரோக்கிய உணவுக்கு படிப்படியாக மாறலாம். இடைப்பட்ட உணவில், திரவ உணவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம். நீண்ட நேர நடைபயிற்சி, நீச்சல் போன்றவற்றைச் செய்யலாம். சோர்வு ஏற்பட்டால் ஓய்வெடுக்க வேண்டும்.
எடை குறைப்பு எவ்வாறு இருக்கும்?
அறுவை சிகிச்சை முடிந்த உடன், படிப்படியாக எடை குறைப்பு துவங்கிவிடும். ஓராண்டில், 60-70 சதவீத எடை குறையும். பலருக்கு சர்க்கரை, ரத்த அழுத்த மருந்துகள் நிறுத்தப்படலாம். துாக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னை முற்றிலும் சரியாகும். மூட்டு வலி குறையும்; சுறுசுறுப்பு அதிகரிக்கும். செயல்திறன் அதிகரிக்கும்.
இப்படி செய்தால் ஒல்லியாகி விடலாம்!
பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை முடிவை எடுப்பது எளிதானதல்ல. வாழ்நாள்
முழுவதும் கடைபிடிக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி சரியான முறை தொடர
வேண்டும். அறுவைசிகிச்சைக்கு முன்பே, உணவு பழக்கத்தை மெதுவாக மாற்றத்துவங்க
வேண்டும். இனிப்பு, எண்ணெயில் பொரித்தது, துரித உணவுகளை படிப்படியாக
குறையுங்கள். காய்கறி, பழங்களை அதிகரிக்க வேண்டும். சிறிய தட்டில் சாப்பிட
பழகுங்கள்; மெதுவாக மென்று சாப்பிடத்துவங்குங்கள். தினசரி நடைபயிற்சி
வேண்டும். புகைப்பழக்கம் இருந்தால் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே,
நிறுத்த வேண்டியது அவசியம்.

