நிறம் மாறும் சருமம் காஸ்மெடிக் சர்ஜரியில் சாத்தியமா?
நிறம் மாறும் சருமம் காஸ்மெடிக் சர்ஜரியில் சாத்தியமா?
PUBLISHED ON : அக் 26, 2025

மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் சர்ஜரிக்கும், காஸ்மெடிக் சர்ஜரிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சில சர்ஜரி, உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். உண்மை நிலவரம் அறிய, காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணனை சந்தித்தோம்.
காஸ்மெடிக் சர்ஜரி என்பது என்ன; எதற்காக செய்யப்படுகிறது?
பிளாஸ்டிக் சர்ஜரியின் ஒரு அங்கம்தான் காஸ்மெடிக் சர்ஜரி. ஆரோக்கியமாக இருக்கும் நபரை, மேலும் அழகுபடுத்தும் செயல்பாடு; இது சர்ஜரி வாயிலாகவும், சர்ஜரி இல்லாத பிற சிகிச்சை வாயிலாகவும் மேற்கொள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் சர்ஜரி என்பது, மருத்துவ ரீதியாக உறுப்பு இழந்து இருந்தாலோ, முகச்சிதைவு, தீக்காயம் போன்ற பல்வேறு பாதிப்புகளையும் சரி செய்வதற்காகவோ மேற்கொள்ளப்படுகிறது.
சர்ஜரி செய்வதற்கான சரியான வயது எது?
காஸ்மெடிக் சர்ஜரி எந்த வயதிலும் பண்ண முடியும். குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் முடிவுகளை எடுக்கும் ஆளுமைத்திறன் இருக்கும். இதனால், 18 முதல் 70 வயது வரை கூட செய்து கொள்ள முடியும்.
காஸ்மெடிக் சர்ஜரி துறையில், எதுபோன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?
தலைமுடி முதல் பாதம் வரை அழகு மேம்படுத்துவது, அமைப்பை சற்று மாற்றுவது, உடல் எடை குறைப்பது, நிறம் கூட்டுவது, பொலிவு ஏற்படுத்துவது என, அனைத்தும் மேற்கொள்ள முடியும்.
ஒரே மாதிரி அறுவை சிகிச்சையால், அனைவருக்கும் தீர்வு கிடைக்குமா... இது நிரந்தரமா?
காஸ்மெடிக் சர்ஜரியில் ஒரே மாதிரியான அறுவைசிகிச்சை கிடையாது. ஒரு நபரின் எதிர்பார்ப்பு, உடல் ஆரோக்கியம் போன்ற பல்வேறு விஷயங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. 100 சதவீதம் தீர்வு கிடைக்கும் என்று கூற முடியாது; 50 முதல் 60 சதவீதம் என்றுதான் உறுதி கொடுப்போம். காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொண்டால் பத்தாது; அதை பராமரிக்க வேண்டியது அவசியம். ஒரு சில சிகிச்சை முறைகள் நிரந்தரமானது. முகப்பொலிவு, தலைமுடி போன்ற சில, பராமரிக்காவிடில் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடும்.
காஸ்மெடிக் சர்ஜரி யாரெல்லாம் பண்ணக்கூடாது?
கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. தவிர, தீவிர மனநோய் உள்ளவர்கள், முதலில் மனநோய் சிகிச்சை பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மட்டுமே மேற்கொள்ள முடியும். தவிர, கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தம் உறையாத தன்மை கொண்டவர்கள் தவிர்ப்பது நல்லது. வளரும் தன்மை கொண்ட தழும்பு உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை.
இந்த சிகிச்சை பற்றி, மக்கள் என்னென்ன தவறான நம்பிக்கைகள் வைத்திருக்கிறார்கள்?
ஒரு அறுவை சிகிச்சை செய்தால், சினிமா நடிகை போன்று முகம், உடல் அமைப்பு மாறிவிடும் என்று தவறாக நினைக்கின்றனர். பிற மருத்துவ சிகிச்சை போன்று, தொடர் சிகிச்சை, பராமரிப்பு அவசியம். இருப்பதை மேம்படுத்த முடியுமே தவிர, இல்லாத ஒன்றை கொண்டுவர இயலாது. காஸ்மெடிக் சிகிச்சைகள் நடிகைகள், மீடியா நபர்கள் மட்டுமே செய்ய முடியும்; லட்சக்கணக்கில் செலவிட வேண்டும் என்பதும் தவறான கருத்து.
'குளூட்டத்தையான்'... ஜாக்கிரதை
''குளூட்டத்தையான் சிகிச்சை என்பது, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த செய்யப்படுகிறது. இது ஒரு மருத்துவ சிகிச்சை முறை; நரம்பு வழியாக மருந்து செலுத்தப்படுகிறது. டாக்டர்கள் மட்டுமே இதை செய்ய வேண்டும். தவறாக செலுத்தினால், ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புண்டு. பார்லரில் செய்வது தவறு. அவர்களுக்கு இதன் விளைவுகள் குறித்து தெரியாது. ஒரு முறை செய்து விட்டு விட்டால், மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடும்,'' என்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்
75388 88529.
aarkayplastic@gmail.com

