PUBLISHED ON : ஜூலை 12, 2026

பசி உணர்வு, உணவு செரிமானம், சர்க்கரை மற்றும் நுண் சத்துக்களை சேமித்து வைத்தல், ரத்த உறைவை சீராக்குதல், பித்த நீர், அல்புமின் புரதங்களை சுரத்தல், நச்சுகளை அகற்றுதல், கிருமி நீக்கம், சீரான துாக்கம் என்று, 500க்கும் அதிகமான பணிகளை அன்றாடம் கல்லீரல் செய்கிறது.
முறையற்ற உணவு பழக்கம், மதுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, உடல் எடை கூடுதல், வைரஸ் தொற்று ஆகியவற்றால், கல்லீரல் பாதிப்படைகிறது. கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேருவது, வைரஸ் தொற்று என்று ஆரம்பித்து, கல்லீரல் செயலிழப்பு வரை, எந்த பாதிப்பாக இருந்தாலும், ஆரம்பத்தில் அறிகுறிகளை கல்லீரல் வெளிப்படுத்தாது.
கல்லீரல் பாதிப்படையும் போது, பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வயிறு வீக்கம், மஞ்சள் காமாலை, உடல் எடை குறைதல், வெளிரிய மலம், அடர் மஞ்சள் நிற சிறுநீர், உடல் சோர்வு, அரிப்பு, ரத்தக்கசிவு, முற்றிய நிலையில் நினைவு தடுமாற்றம் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும்.
எந்த நோயாக இருந்தாலும், சித்த மருத்துவத்தில், பல நுாற்றாண்டுகளாகவே கல்லீரலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பித்த நாடியை சோதித்து அதற்கு தக்கவாறு மருந்துகளை பரிந்துரைப்பர்.
நம் மண்ணில் விளையும் பல எளிய மூலிகைகள், அனுபவத்தில் மட்டுமல்ல, அறிவியல் அடிப்படையிலும் கல்லீரல் நோய்களுக்கு சிறந்த தீர்வுகளை தருகின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எளிய மூலிகைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி வர, பல கல்லீரல் நோய்களை தடுக்கலாம்.
இந்த வரிசையில் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை, கொளிஞ்சி, கோடகசாலை, பொன்னாங்கண்ணி, நீலி அவுரி, அருகம்புல், நாயுருவி, நீர்முள்ளி, நெருஞ்சில் போன்றவை சிறந்த பலன் தரும்.
குறிப்பாக, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி எனும், 'கீரை இரட்டையர்களை' மாதம் இரண்டு நாட்களாவது, உணவில் சேர்க்க வேண்டும். மசியல், பொரியல், துவையல், சூப் செய்து சாப்பிட்டால் கல்லீரல் புத்துணர்ச்சி பெறும்; கல்லீரலில் படிந்த கொழுப்பும், நஞ்சுகளும் நீங்கும். பசியும், செரிமானமும் இயல்பாகும்.
நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்; ரத்த விருத்தி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இக்கீரைகள், லேசான கசப்பு, துவர்ப்பு தன்மை உடையவை. இச்சுவையை விரும்பாதவர்கள், கைப்பிடி அளவு கீரையை நறுக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, 30 மில்லி அளவு, காலை வெறும் வயிற்றில் மாதத்தில் இரண்டு நாட்கள் பருகலாம்.
டாக்டர் மூலிகைமணி அபிராமி
சித்த மருத்துவர், சென்னை
96000 10696, 90030 31796,
consultabirami@gmail.com
