தகவல்கள் தெரிந்து கொள்வதால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது!
தகவல்கள் தெரிந்து கொள்வதால் மட்டும் தீர்வு கிடைத்து விடாது!
PUBLISHED ON : நவ 15, 2026

கடந்த 10 ஆண்டுகளாக செரிமான மண்டலம் பற்றிய புரிதல், விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. இதற்கு சமூக ஊடகங்கள் மிக முக்கிய காரணம். உடலில் தெரியும் சிறிய மாற்றத்தையும் உடனடியாக 'சாட் ஜிபிடி' போன்ற ஏ.ஐ.,யிடம் கேட்கின்றனர். இந்த அறிகுறிகளுக்கு என்ன பிரச்னைகள் வருவதற்கு வாயப்பு உள்ளது என்பதை விளக்கமாக சொல்கிறது. இப்படி தகவல்களை எளிதாக பெறும் வசதி இருப்பது, நோய் பற்றிய புரிதலை தந்துள்ளது.
விஷயம் தெரிந்தால் போதுமா?
ஐம்பது வயதிற்கு மேல் பெருங்குடல், மலக்குடல் கேன்சர் வருவது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, இளம் வயதினர் பெருங்குடல், மலக்குடல் கேன்சரால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
* இதற்கு காரணம், சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், பதப்படுத்திய உணவுகள், அளவுக்கு அதிகமாக மின்னணு சாதனங்களின் பயன்பாடு என்று வாழ்க்கை முறை மாற்றங்கள், உடற்பயிற்சிஇல்லாதது, தொடர்ச்சியாக பல மணி நேரம் 'ஸ்குரோலிங்' செய்வது உட்பட வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் மன அழுத்தம், தொடர்ச்சியாக துாக்கமின்மை, இவற்றின் தாக்கத்தால் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்யாதது என்று பல காரணங்கள உள்ளன. சுற்றுச்சூழல் மாசினால் கேன்சர் பாதிப்பு வரும் என்று பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
*அறிகுறிகளின் அடிப்படையில், தகவல்களை தெரிந்து கொண்டாலும், மருத்துவ ஆலோசனைக்கு வருவபவர்கள் மிகக் குறைவு. காரணம் தயக்கம். அதிலும், மலக்குடல் போன்று உடலின் தனிப்பட்ட பகுதியில் வரும் பிரச்னைகளை வெளியில் சொல்வதற்கே கூச்சப்படுகின்றனர். உலகம் முழுவதும் இது தான் நிலைமை.
* பெருங்குடல் உட்சுவரில் 'பாலிப்' எனப்படும் சிறு கட்டிகள் வரும். இது கேன்சராக மாறுவதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கோலோனோஸ்கோபி செய்யும் போது, பாலிப் இருந்தால், கட்டிகளை அகற்றி விடலாம். மரபு ரீதியாக கேன்சர் வரும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு இப்பரிசோதனை மிகவும் அவசியம்.
ஐம்பது வயதிற்கு மேல் அனைவரும் கோலோனோஸ்கோபி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 20 வயதிற்குள் ஒருவருக்கு பெருங்கடல், மலக்குடல் கேன்சர் பாதிப்பு வந்தால் மரபியல் காரணமாக இருக்கலாம். பெற்றோருக்கு 50 வயதில் இவ்வகை கேன்சர் இருந்தால், அவர்களின் குழந்தைகள், 40 வயதிலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை
பெருங்குடல், மலக்குடலில் கேன்சர் பாதித்த பகுதியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்கு பதில், கீமோ, ரேடியோ தெரபி முதலில் தருவதால், மீண்டும் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைகிறது என்பது, பல ஆராய்ச்சிகளில் உறதி செய்யப்பட்ட ஒன்று. எனவே, தற்போது இந்த முறை தான் வழக்கத்தில் உள்ளது. 100 பேருக்கு கீமோ, ரேடியோ கொடுத்தால், 20 சதவீதம் பேருக்கு கேன்சர் முற்றிலும் குணமாகி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு கட்டியின் அளவு குறைந்து விடுகிறது. அதன்பின், அறவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றிவிட்டு, தேவையான சிகிச்சைகளை செய்யலாம். இந்த முறையில் தான் சிகிச்சை தர வேண்டும் என்ற சர்வதேச நெறிமுறைகள் உளளன. இதை மாற்ற முடியாது.
டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்,
கோலோரெக்டல் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்,
அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மையம், சென்னை.
96778 78720
apcc@apollohospitals.com
