PUBLISHED ON : செப் 07, 2025

இளமையில் தனிமையை நாடும் நமக்கு, முதுமையில் தனிமையை எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கிறது. இத்தனிமை பல முதியோரை தற்கொலைக்குத் துாண்டுகிறது. குறிப்பாக, துணையை இழந்து நிற்கும் முதியோர், இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
மனநல ஆலோசகர் பிரதீபா நம்மிடம் பகிர்ந்தது...
தனிமை என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது அல்ல. ஒவ்வொருவரின் சூழல், வயது, உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை அடிப்படையில் அழகானதாகவும், அபாயமானதாகவும் மாறும்.
சமீபத்தில், 70 வயதான முதியவர் ஒருவர் தற்கொலை எண்ணத்துடன் 'கவுன்சிலிங்' வந்திருந்தார். பெரிய வீடு, வேலைக்கு ஆட்கள், நேரத்துக்கு உணவு என அனைத்தும் இருந்தும் தற்கொலை செய்து கொள்ளத் தோன்றுவதாக வந்திருந்தார். அவரது இரண்டு மகன்களும் அவரவர் குடும்பத்துடன், வெளிநாட்டில் வேலை செய்து பணத்தை வாரிக்கொடுத்தாலும், தனிமை அவருக்கு மனரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தி இருப்பது அறிந்து, 'கவுன்சிலிங்' தொடர்ந்து கொடுக்கப்படுகிறது.
உடல் நல பாதிப்பு, வறுமை போன்ற காரணங்கள் மட்டுமின்றி, அனைத்து வசதியும் இருக்கும் முதியோர் பலரும் தனிமையால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். பிள்ளைகள் வெளிநாடுகள், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் செட்டில் ஆகியிருப்பின், சொந்தமாகவே இருந்தாலும் பெரிய அளவிலான தனி வீடுகளை தவிர்த்து, பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய அபார்ட்மென்ட் அல்லது முதியோருக்கான பிரத்யேக அபார்ட்மென்ட்களுக்கு குடியேறுவது நல்லது.
தினந்தோறும் காலையில் எழுவது, உடற்பயிற்சி, அபார்ட்மென்ட் நண்பர்களுடன் சந்திப்பு, ஆன்மிக ரீதியான இடங்களுக்குச் செல்தல், சந்தைக்குச் செல்வது என அன்றாட நடவடிக்கையை வைத்துக் கொண்டால் தனிமையை போக்கும்.
பண்டிகை சமயங்களில் நாம் தானே இருக்கிறோம் என்று நினைக்காமல், குடியிருப்பு வாசிகளுடன் இணைந்து கொண்டாட வேண்டும். ஓ.டி.டி., இணையதளங்களில் நுாற்றுக்கணக்கான படங்கள் உள்ளன. அவற்றில், பிடித்த பழைய, புதிய படங்களை பார்க்கலாம். உறவினர்களது வீடுகளுக்குச் சென்று வரலாம்.
பகல் பொழுதில் துாக்கத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பலர் பகலில் உறங்குவதால், இரவில் உறக்கம் வராமல் துாக்கமின்மை பிரச்னைக்கு ஆளாகி, மனஅழுத்தத்துக்கு ஆளாவதை காண்கிறோம். இரவில், 9-10 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டியது அவசியம்.
துணையை இழந்து தனிமையில் இருப்பவர்கள், நிலை சற்று சிரமமானது. இதுபோன்ற சூழலில் உள்ளவர்களுக்கு பிள்ளைகள், உறவினர்களின் ஆதரவு, அரவணைப்பு கட்டாயம் தேவை. வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகளுடன் சென்று, அவர்களுடன் நேரம் செலவிடுவது சகஜ நிலைக்கு திரும்ப உதவும். 40 வயதுக்கு மேல் ஆண்களோ, பெண்களோ அவரவர்களுக்கான நட்பு வட்டாரங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் சுமூகமான சூழல்களை ஏற்படுத்தி, வாரத்துக்கு ஒரு முறையாவது அழைத்து பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனிமையில் நமக்கான தேடல்கள், பொழுதுபோக்கு வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது சரியான சமயத்தில் கைகொடுக்கும். பிள்ளைகள், பொருளாதாரத்தை தாண்டி ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.