PUBLISHED ON : ஆக 30, 2026

'சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாளெல்லாம் நரகமாகிவிடும்' என்ற பழமொழி உண்டு. ஆனால் தன்னுடைய இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பவர்களுக்கு, எப்படி மருத்துவ ரீதியாக உதவ முடியும் என, அரசு மருத்துவமனை முதியோர் சிகிச்சை பிரிவு டாக்டர் பாரதி ரமேஷிடம் கேட்டோம்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு, 'இறுதி கால பராமரிப்பு' அவசியம். அவர்களை வேதனையின்றி, கண்ணியத்துடன் வாழ வைத்து வழியனுப்ப வேண்டும்.
தீவிர சிகிச்சைகளை விட, இவர்களுக்கு 'வலி நிவாரணமே' முக்கியம். குணமடையும் வாய்ப்பு இல்லாத இறுதி கட்டத்தில் இருக்கும்போது, செயற்கை சுவாசக் கருவி, சி.பி.ஆர். வழங்கும் முயற்சிகள், தொடர் ஊசிகள் மற்றும் குழாய்கள் மூலமாக உணவளிப்பது கூடாது.
கடுமையான வலி, மூச்சுத்திணறல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் குழப்பமான மனநிலையைக் கட்டுப்படுத்தி, அமைதியான சூழலில் வைக்க வேண்டும்.
ஒரே நிலையில் தொடர்ந்து படுத்திருப்பதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவர்களைப் பக்கவாட்டில் மாற்றிப் படுக்க வைக்க வேண்டும். வாய் சுத்தம், குளிக்க வைப்பது, கழிப்பறை வசதிகள் மற்றும் தேவையான அளவு உணவு, நீர்ச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
'குடும்பத்திற்குச் சுமையாக இருக்கிறோமோ...' என்ற எண்ணம் முதியவர்களுக்கு வரக்கூடாது. அன்பாக பேசுவதும், ஆன்மிக நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதும் மன நிம்மதியைத் தரும்.
நீண்ட நாட்கள் ஒரு முதியவரைத் தொடர்ந்து பராமரிக்கும்போது பராமரிப்பாளர்களுக்கும், உடல், மன ரீதியாக சோர்வு ஏற்படும். பராமரிப்பு, நிதி சுமையை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சாத்தியமெனில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் அல்லது 'பாலியேட்டிவ் கேர்' மையங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அன்பான மற்றும் வலி இல்லாத பராமரிப்பின் மூலம் ஒருவரின் இறுதி நாட்களை அமைதியானதாகவும், கண்ணியமானதாகவும் மாற்றுவதே உண்மையான முதியோர் நலப் பராமரிப்பாகும்.
'சிகிச்சையை முடிவு செய்யும் உரிமை'
''நோய் தீவிரமடைவதற்கு முன்பே அல்லது நினைவாற்றல் தெளிவாக இருக்கும் காலத்திலேயே, எந்த மாதிரியான சிகிச்சை போதும் என்பதை முன்கூட்டியே எழுதி வைப்பதற்கு, 'லிவிங் வில்' அல்லது 'அட்வான்ஸ் மெடிக்கல் டைரக்டிவ்' என்று பெயர். நோயாளி வீட்டில் இருக்க விரும்பினால், அவர்களின் விருப்பப்படியே அமைதியான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்' என்றார் டாக்டர் பாரதி ரமேஷ்.
