தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இதயத்தின் குரலைக் கேளுங்கள்!

இதயத்தின் குரலைக் கேளுங்கள்!

இதயத்தின் குரலைக் கேளுங்கள்!


PUBLISHED ON : செப் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாரடைப்பு என்பது எப்போதும் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுவதில் இருந்து தான் தொடங்கும் என்று அர்த்தமல்ல. இதயத் துடிப்பில் ஏற்படும் சீரற்ற தன்மை, விவரிக்க முடியாத சோர்வு, தலைசுற்றலாக வெளிப்படலாம். இதயச் செயலிழப்பு என்பது படிப்படியாக அதிகரிக்கும் மூச்சுத்திணறலுடன் தொடங்கலாம்.

சில நேரங்களில் ஆபத்தான இதய நோய்கள் கூட மிகச் சிறிய, விட்டு விட்டு, எளிதில் அலட்சியப்படுத்தக் கூடிய அறிகுறிகளை மட்டுமே காட்டலாம். உடலில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தோன்றினால், 'ஒன்றும் இல்லை' என்று நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள்.



வயிறும் இதயமும்


நெஞ்சில் ஏற்படும் அசவுகரியம் என்பது அழுத்தம், இறுக்கம், பாரம், பிசைவது போன்ற உணர்வு, எரிச்சல், அஜீரணம் போலவும் உணரப்படலாம். இந்த வலி கை, தோள்பட்டை, முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றின் மேல் பகுதி வரை பரவலாம். இந்த அறிகுறிகள், தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

விவரிக்க முடியாத மூச்சுத்திணறல், குறிப்பாக முன்பு எளிதாக செய்த வேலைகளை இப்போது செய்யும்போது மூச்சு வாங்கினால், அதனை வெறும் வயது முதிர்வினால் ஏற்படும் உடல் சோர்வு என்று அலட்சியப்படுத்தக் கூடாது. இது இதய ரத்தக் குழாய் அடைப்பு, இதயச் செயலிழப்பு, வால்வு பிரச்னை, பிற இதய சம்பந்தப்பட்ட நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

திடீர் வியர்வை, குறிப்பாக நெஞ்சு வலி, குமட்டல், உடல் சோர்வு, மூச்சுத்திணறலுடன் சேர்ந்து அதிகப்படியான வியர்வை வருவது, திடீர் மாரடைப்புக்கான ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

குமட்டல், வாந்தி சில நேரங்களில் மாரடைப்புடன் சேர்ந்து வரலாம். ஆனால், இது வயிறு சம்பந்தப்பட்ட வாயுத் தொல்லை, அஜீரணம் என்று தவறாக நினைக்கலாம்.

வழக்கத்திற்கு மாறான உடல் சோர்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், புதிதாக ஏற்படும் அதிகப்படியான சோர்வுடன் மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைசுற்றல், வழக்கமான வேலைகளைச் செய்ய முடியாமல் போவது போன்றவை இருந்தால், கட்டாயம் மருத்துவ பரிசோதனை தேவை.



லப் -டப்... லப் -டப்


மயக்கம், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், கடுமையான தலைசுற்றலுடன் வரும் நெஞ்சு படபடப்பை ஒருபோதும் அலட்சியம் செய்யக் கூடாது.

அதேபோல், உடல் உழைப்பின் போது ஏற்படும் விவரிக்க முடியாத மயக்கம், அடிக்கடி ஏற்படும் காரணமற்ற தலைசுற்றல் போன்றவற்றிற்கும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.



ஒரே நோய்... பல அறிகுறிகள்


இதய நோய் எப்போதுமே ஒரே மாதிரியான அறிகுறிகளுடன்தான் வரும் என்பது பலரும் நினைக்கும் ஒரு தவறான கருத்தாகும். உதாரணமாக, பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது, பலரும் நினைப்பது போல கடுமையான நெஞ்சு வலி வராமல் இருக்கலாம். அதற்குப் பதிலாக மூச்சுத்திணறல், அசாதாரணமான உடல் சோர்வு, குமட்டல், முதுகு அல்லது தாடையில் அசவுகரியம், தலைசுற்றல், உடல் பலவீனம், நெஞ்சில் ஒருவித அசவுகரியம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.



சர்க்கரை நோய்


வலியை உணர்த்தும் நரம்புகளை நீண்ட கால சர்க்கரை நோய் பாதிக்கலாம். இதனால், சிலருக்கு கடுமையான நெஞ்சுவலி போன்ற எந்த அறிகுறியும் இல்லாமலேயே இதய ரத்தக்குழாய்களில் பெரிய அளவில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக உணர்கிறோம் என்பதற்காக, நம் ரத்தக்குழாய்கள் ஆரோக்கியமாக உள்ளன என்று அர்த்தமல்ல.

இதய நோயை ஏற்படுத்தும் சில முக்கிய காரணிகளான உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை கோளாறு போன்றவை, எந்த அறிகுறியும் காட்டாமல் பல ஆண்டுகளாக நம் உடலிலேயே அமைதியாக இருக்கக் கூடும்.

உலக இதய அமைப்பின் 'கீப் தி பீட்' முன்னெடுப்பு, செப்டம்பர் மாதம் முழுதும் தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய மக்களை ஊக்குவிக்கிறது. நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடனம், ஓடுதல், விளையாடுதல், படிக்கட்டுகளில் ஏறுவது, வீட்டு வேலைகளைச் செய்வது என அனைத்தும் இதில் அடங்கும். புகைப்பிடித்தல் இதய நோய்க்கான மற்றொரு முக்கியக் காரணமாகும். புகையிலை ரத்தக் குழாய்களைச் சேதப்படுத்தும், அடைப்புகளை ஏற்படுத்தும், ரத்தக் கட்டிகளை உருவாக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை மிகவும் அதிகரிக்கும். எந்த வயதில் புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் அது நன்மை பயக்கும்.

துாக்கமும் மிக முக்கியம். சரியான துாக்கம் இல்லாவிட்டால் ரத்த அழுத்தம், வளர்சிதை மாற்றம், உடல் எடை, மன அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும். குறட்டை இருந்தால், துாங்கும் போது மூச்சு விடச் சிரமப்பட்டால், காலையில் எழும்போது சோர்வாக இருந்தால், பகலில் அதிக துாக்கம் வந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.



மரபணு சொல்லும் தகவல்


மன அழுத்தமும் இதயத்தைப் பாதிக்கும். ஆனால், நெஞ்சில் ஏற்படும் எல்லா வலிகளும் மன அழுத்தத்தால் மட்டும் வருவதில்லை. வலி புதிதாக இருந்தாலோ, அடிக்கடி வந்தாலோ, கடினமான வேலை செய்யும்போது ஏற்பட்டாலோ அதனை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். நெஞ்சு வலியை வெறும் மன அழுத்தம் என்று நினைத்து, இதய நோயைக் கண்டறிவதை தாமதப்படுத்தக் கூடாது. மரபணுக்களை மாற்ற முடியாது, ஆனால் அது சொல்லும் தகவலைக் கொண்டு ஆரோக்கியத்தைக் காக்கலாம்.

டாக்டர்களின் விருப்பம்

எந்தவொரு மருத்துவரிடம் கேட்டாலும், அவர்களின் பதில் ஒன்று தான்: மாரடைப்பு வந்த பின் சிகிச்சை அளிப்பதை விட, அதைத் தடுப்பதையே விரும்புகிறோம். பக்கவாதம் வருவதற்கு முன்பே உயர் ரத்த அழுத்தத்தைக் கண்டறிய விரும்புகிறோம். அடைப்பு ஏற்படுவதற்கு முன்பே அதிக கொழுப்பை கண்டறிய விரும்புகிறோம். புகையிலை ரத்தக் குழாய்களை பாதிக்கும் முன்பே, புகைப்பிடிப்பதை நிறுத்த உதவ விரும்புகிறோம். சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் வரும் முன்பே உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்க விரும்புகிறோம். இதய நோய் முற்றிய நிலையில் சிகிச்சை அளிப்பதை விட, ஆரம்பத்திலேயே கண்டறிய விரும்புகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் உலக இதய தினம், இதய ஆரோக்கியம் என்பது ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே உரியது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. 'ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்' என்பதை வலியுறுத்தி, இந்த ஆண்டு உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது .

டாக்டர் நிதின் வி ஆதித்யா, இதயவியல் நிபுணர், டாக்டர் மேத்தா மருத்துவமனை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us